தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பெயரில் போலி இமெயில் கணக்கு உருவாக்கி தவறான கருத்துக்கள் பரப்பி வருவதாக காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் ஆளுநராக பன்வாரிலால் புரோகித் கடந்த 2017ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் அவரை தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பில் இருந்து விடுவித்து நாகலாந்து ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தமிழ்நாடு ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். இந்தநிலையில், அவரின் பெயரில் போலி இமெயில் கணக்கு உருவாக்கி தவறான கருத்துக்கள் பரப்பி வருவதாக காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆளுநர் மாளிகை பெயரில் சில போலி மின்னஞ்சல்கள் உருவாக்கப்பட்டு தவறான கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு விசாரணையும் நடந்து வருகிறது. இப்படியான போலி கணக்குகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். govtam@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியும் @rajbhavan_tn என்ற ட்விட்டர் கணக்குமே அதிகாரப்பூர்வமானவை என ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.







