வாரிசு படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் தன்னை காண குவிந்த ரசிகர்களுக்கு கையசைத்து, தனது மகிழ்ச்சியை நடிகர் விஜய் வெளிப்படுத்தினார்.
தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. தமிழில் வாரிசு என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் தெலுங்கில் இந்த படத்திற்கு வாரசுடு என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்
பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், ஷ்யாம், யோகி பாபு, ஜெயசுதா, குஷ்பு என பல திரை நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். விஜய்யின் வழக்கமான ஆக்ஷன் படமாக இல்லாமல் ஃபேமிலி செண்டிமெண்ட் படமாக உருவாகி வருகிறது. 2023 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இத்திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் காட்சிகள் சென்னை எண்ணூர் கத்திவாக்கம் ETPS
குடியிருப்பில் படமாக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் இரவு நேரங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் கடந்த சில நாட்களாகவே ரசிகர் பட்டாளம் விஜயை காண்பதற்காக எண்ணூர் பகுதியில் படையெடுத்து வருகின்றனர். நடிகர் விஜயை காண பேருந்துகளிலும் கூட்டம் கூட்டமாக ரசிகர்கள் வருகை தருகின்றனர். இதன் காரணமாக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகளுக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் நேற்று படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வழக்கம் போல் முன்னதாகவே வந்த நடிகர் விஜய், ரசிகர்கள் தன்னை காண்பதற்காக காத்திருந்ததைக் கண்டு, உடனடியாக அருகில் இருந்த கல் மீது ஏறி அவர்களுக்கு கையசைத்தார். இதனை அங்கு இருந்த ஏராளமான ரசிகர்களும் பொதுமக்களும் தங்கள் செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துக் கொண்டனர். மேலும் பயங்கர சத்தங்களை எழுப்பி ஆரவாரம் செய்தனர்.
இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 2023ஆம் ஆண்டு வெளியாகவுள்ள வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு, இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.







