காவல்துறை தலைமை இயக்குநர் பெயரை பயன்படுத்தி போலியான குறுஞ்செய்தி வருவதாக டிஜிபி சைலேந்திர பாபு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி ஏமாற்றுபவர்கள் பெருகி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் தங்கள் பொன்னான நேரத்தை செலவிடும் நபர்களை கண்டறிந்து அவர்களை குறிவைத்து பெரும்பாலான ஏமாற்று வேலைகள் அரங்கேறி வருகிறது.
பெரிய பெரிய நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி, இலவசமாக பணம், பொருட்கள் தருவதாக கூறி தனிப்பட்ட சமூக வலைத்தள கணக்குகள் ஹேக் செய்யப்படுகிறது. இதனை உண்மை என நம்பி ஏராளமானோர் முகம் தெரியாத மர்ம நபர்களிடம் பணத்தையும், தனது சுய விபரங்களையும் பறிகொடுக்கின்றனர். இதனை தடுக்க காவல்துறை மற்றும் சைபர் கிரைம் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், காவல்துறை பெயரிலேயே தற்போது ஏமாற்று வேலை நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை இயக்குநர் பெயரை பயன்படுத்தி அமேசான் அன்பளிப்பு கூப்பன்களை கேட்டு சிலரது வாட்ஸ் அப் எண்ணுக்கு மர்ம நபர்களிடம் இருந்து குறுஞ்செய்தி அனுப்பப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை சுதாரித்து கொண்ட தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், காவல்துறை தலைமை இயக்குநர் என்று தங்களை அறிமுகப்படுத்துக் கொண்டு போலி நபர்கள் அமேசான் அன்பளிப்பு கூப்பன்கள் வாங்கி அனுப்பும்படி Whatsapp SMS குறுஞ்செய்தி அனுப்பவதாக தெரிய வருகிறது. இந்த போலியான குறுஞ்செய்தியை பொருட்படுத்த வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார். அந்த நபரை அடையாளம் கண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் விளக்கமளித்துள்ளார்.
-இரா.நம்பிராஜன்








