Fact Check : “இந்துக்களின் பணத்தை எடுத்து முஸ்லிம்களிடம் கொடுப்போம்” என கார்கே பேசினாரா? – உண்மை என்ன?

This News is Fact Checked by NewsMeter இந்துக்கள் வீட்டில் நுழைந்து, அவர்களிடம் இருக்கும் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுப்போம் என்று மல்லிகார்ஜுன் கார்கே கூறியதாக சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று வைரலாகி…

This News is Fact Checked by NewsMeter

இந்துக்கள் வீட்டில் நுழைந்து, அவர்களிடம் இருக்கும் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுப்போம் என்று மல்லிகார்ஜுன் கார்கே கூறியதாக சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று வைரலாகி வருகிறது. இதன் உண்மைத் தன்மையை சரிபார்த்தில் இது பொய்யாக திரித்து வெளியிடப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

“காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுவதை கேளுங்கள், “உங்கள் வீட்டில் நுழைந்து, அலமாரியை உடைத்து அதில் இருக்கும் பணத்தை எடுத்து அதிக பிள்ளைகளை பெற்ற முஸ்லீம்களுக்கு கொடுப்போம். இந்துக்களிடம் அதிக பிள்ளைகள் இல்லாததற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்?” என ஒரு காணொலி சமூல வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மல்லிகார்ஜுன கார்கே வீடியோ – உண்மை என்ன?

மல்லிகார்ஜுன கார்கே பேசிய காணொலியின் உண்மை தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த மே 3ஆம் தேதி “குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பேச்சு” என்ற தலைப்பில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் முழு நீள காணொலி வெளியிடப்பட்டிருந்தது.

அதில், 31:50 பகுதியில் பேசும் மல்லிகார்ஜுன கார்கே, “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.  நாட்டில் எத்தனை பட்டதாரிகள் உள்ளனர். அவர்களுக்கு வருமானம் எவ்வளவு வருகிறது ,  தனிநபர் வருமானம் எவ்வளவு என்பதை ஆய்வு செய்து அவர்களுக்கான வாய்ப்புகளை சமமாகப் பகிர்ந்தளிப்போம்” என பேசியிருந்தார்.

அந்த காணொலியில் மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில், “நாங்கள் இப்படிச் சொல்வதை பிரதமர் மோடி எவ்வாறு மாற்றித் திரித்துச் சொல்கிறார் என்றால், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் (இந்துக்கள்) வீடுகளின் உள்ளே நுழைந்து அலமாரியை உடைத்து அதில் உள்ள பணத்தை அதிக பிள்ளை பெற்ற முஸ்லிம்களுக்குக் கொடுக்க இருக்கிறார்கள் என திரித்து பொய் பேசுகிறார்” எனப் பேசியிருந்தார்.

பொய் பிரச்சாரம்

இந்த வீடியோவில்  காங்கிரஸ், ஜாதி வாரியான கணக்கெடுப்பைக் மேற்கொள்ளும் என்றும் அதற்கேற்ப வாய்ப்புகள் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை கூறுவதை பிரதமர்  மோடி தவறாகத் திரித்துப் பொய் பிரச்சாரம் செய்திருந்தது சமீபத்தில் சர்ச்சையானது. இதற்காக காங்கிரஸின் புகாரைத் தொடர்ந்து பாஜகவிற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நிலையில் மோடியின் பேச்சிற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய காணொலியில் பிரதமர் சொன்னதாக கோடிட்டு காட்டிய பகுதியை மட்டும் வெட்டி அதனை மல்லிகார்ஜுன கார்கே பேசியதாக சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த செய்தி தவறாக திரித்து பரப்பப்பட்டு வருவது அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

Note : This story was originally published by ‘NewsMeter’ and republished by ‘News7 Tamil’ as part of the Shakthi Collective.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.