கன்னியாகுமரி மாவட்டத்தில் மகனாக இருந்து கவனிப்பதாக கூறி பிள்ளையில்லாதவரிடம் சொத்து அபகரிக்கப்பட்ட நிலையில், சார் ஆட்சியர் எடுத்த அதிரடி நடவடிக்கை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் அருகே நெய்யூர் முரசங்கோடு பகுதியை சேர்ந்தவர் மரிய லூயிஸ். இவர் தனக்கு குழந்தைகள் இல்லாத காரணத்தால் தன்னை எதிர்காலத்தில் பிள்ளையாக இருந்து பராமரிப்பார் என்ற நம்பிக்கையில் தனக்கு உரிமைப்பட்ட 5 சென்ட் நிலத்தை தனது சகோதரன் தாமஸ் என்பவரின் மூத்த மகனான ரைமன்ட் வியலின்ஸ் பெயரில் நிபந்தனையுடன் கூடிய செட்டில்மென்ட் ஆவணமாக எழுதி வைத்திருக்கிறார்.
மேற்படி ஆவணத்தை எழுதி வாங்கிக் கொண்ட ரைமன்ட் வியலின்ஸ் என்பவர் மரிய லூயிஸையும் அவரது மனைவி அசுந்தா மேரியையும் பராமரிக்கவில்லை. அசுந்தா மேரி உடல் நலம் பாதிக்கப்பட்டு தற்போது படுத்த படுக்கையாக உள்ளார்.
தனது சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்டு தன்னையும் தனது மனைவியும் ரைமன்ட் வியலின்ஸ் மற்றும் அவரது மனைவி ஜோஸ்பின் ஐடா ஆகியோர் பராமரிக்காததை குறித்து மன வேதனை அடைந்த மரிய லூயிஸ் பத்மநாபபுரம் சார் ஆட்சியரிடம் புகார் அளித்திருக்கிறார்.
அந்த மனு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு மனுதாரரின் சொத்துக்களை பராமரிப்பதாக கூறி எழுதி வாங்கிய ரைமன்ட் வியலின்ஸ் என்பவரது செட்டில்மென்ட் ஆவணத்தை ரத்து செய்து பத்மநாபபுரம் சார் ஆட்சியர் H.R.கௌஷிக் IAS உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.







