இந்திய அளவில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் கூட்டணியைக் கட்டமைத்து அணி வகுத்து நிற்கும் நிலையில், நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெறுகிறது. இந்த கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகளின் தாக்குதல் திட்டம் என்ன? ஆளும் பாஜகவின் தடுப்பு வியூகம் என்ன? விரிவாக பார்க்கலாம்.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 31ல் தொடங்கி ஏப்ரல் முதல் வாரம் வரை 2 கட்டங்களாக நடைபெற்றது. இந்த தொடர், ஹிண்டன் பர்க் ஆய்வறிக்கையையடுத்து, அதானி விவகாரம், லண்டனில் ராகுல் காந்தியின் பேச்சு உள்ளிட்டவற்றால் பெருமளவு முடங்கியது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 20ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. வரும் 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் கடைசி மழைக்கால கூட்டத் தொடராக இது அமைந்துள்ளது. இந்த கூட்டத் தொடரில் 31 மசோதாக்கல் தாக்கல் செய்யப்பட இருக்கின்றன என்று உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா 2022, வன (பாதுகாப்பு) திருத்த மசோதா 2023, உயிரியல் பன்முகத்தன்மை (திருத்தம்) மசோதா 2021, தேவையற்ற சட்டங்களை நீக்க வழிவகுக்கும் ரத்து மற்றும் திருத்த மசோதா 2022, தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மசோதா 2023, தபால் சேவை, கூட்டுறவு சங்கங்கள், பிறப்பு, இறப்பு பதிவு மசோதா உள்ளிட்டவற்றை குறிப்பிடலாம். இது மட்டுமின்றி உத்தேச பட்டியலில் இல்லாத புதிய மசோதாக்களுக்கும் வாய்ப்புள்ளது என்கிறார்கள். இரு அவைகளிகளும் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இருக்கிறது. என்றாலும் விவாதம் காரசாரமாகவே இருக்கும் என்கிறார்கள்.
தற்போது மீண்டும் விவாதத்திற்குள்ளாகியுள்ள பொது சிவில் சட்டம், மணிப்பூர் வன்முறை, டெல்லி மாநில அரசு அதிகார விவகாரம், பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சிங் மீதான பாலியல் புகார் உள்ளிட்ட பல்வேறு பரபரப்புகளுக்கும் பஞ்சமில்லாத நிலையில் நாடாளுமன்றமும் கூடுகிறது. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியை சேர்ந்த கட்சிகள் நாடாளுமன்றத்தில் இவை குறித்து உரக்க குரல் கொடுக்கும் என்கிறார்கள்.
அதுமட்டுமின்றி எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த மாநில அமைச்சர்கள், எம்பிக்கள் உள்ளிட்டோர் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ ஆகிய மத்திய ஏஜென்சிகளால், சோதனைக்கு உள்ளாக்கப்படுவதாக குற்றச்சாட்டு தொடர்ந்து முன் வைக்கப்படுகிறது. இது குறித்தும் விவாதத்திற்கு உள்ளாக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
ஒருங்கிணைந்துள்ள எதிர்க்கட்சிகள்
காங்கிரஸ் ஒருங்கிணைப்பில் 26 கட்சிகளின் தலைவர்கள் இந்தியா கூட்டணியில் இணைந்துள்ளனர். இந்த கூட்டணிக் கட்சியினர் இணைந்தும் தனித்தும் நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களை என இரு அவைகளிலும் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக தக்காளி மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது நாடாளுமன்ற கூட்டத் தொடரிலும் எதிரொலிக்கும்.
இதையும் முக்கிய பிரச்னையாக எதிர்க்கட்சிகள் முன் வைப்பார்கள் என்கிறார்கள்.
இது தவிர தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும் என்று திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இது போல் மாநிலவாரியான பிரச்னைகள் குறித்தும் கவன ஈர்ப்பு தீர்மானங்கள், விவாதங்களுக்கு மாநில மற்றும் தேசிய கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
சுமுகமாக நடத்த முயற்சி
எப்படியாவது இந்த கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த வேண்டும் என்று ஆளும் பாஜக நினைக்கிறது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி கட்சிகளிடமும் இது குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் எதிர்க்கட்சிகளும் எந்தெந்த பிரச்சினைகளை எப்படியெல்லாம் எழுப்பலாம் என்றும் கூடி முடிவு செய்து அவைக்கு செல்கின்றன. மொத்தத்தில் இந்த கூட்டத் தொடராவது கூச்சல், குழப்பம், ஒத்திவைப்புகள், முடக்கம் என இல்லாமல் சுமூகமாக நடக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
அனைத்துக் கட்சிகளின் கூட்டத்திற்கு பிறகு, ‘’அனைத்து பிரச்னைகள் குறித்தும் விதிகளுக்கு உட்பட்டு விவாதிக்கலாம். இந்த கூட்டத்தொடரை அமைதியாகவும் ஆக்கப்பூர்வமாகவும் நடத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி வலியுறுத்தியுள்ளார். ‘’எதிர்க்கட்சிகளின் சார்பில் ஒற்றை வேண்டுகொளை முன் வைக்கிறோம். இந்த முறையாவது மக்கள் பிரச்சினைகளைப் பற்றி பேச அனுமதி கொடுங்க’’ என்கிறார் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அதிரஞ்சன் சவுத்ரி.
புது உத்வேகத்தோடு வரும் எதிர்க்கட்சிகளின் கேள்விக் கணைகளை, ஆளும் பாஜக, பிரதமர் மோடி எப்படி எதிர்கொள்ள போகிறார்கள். சமாளிக்குமா? சாதிக்குமா? அவைகளில் ஆக்கப்பூர்வ விவாதங்கள் நடைபெறுமா? பொருத்திருந்து பார்க்கலாம்…
இது குறித்து சொல் தெரிந்து சொல் பகுதியில் வெளியான விரிவான காணொளியைக் காண….









