கொரோனா காலகட்டத்தில் ’கன்வர் யாத்திரை’க்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் உத்தரபிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ‘கன்வர் யாத்திரை’ நடைபெற்று வருகிறது. சிவபக்தர்கள் இந்த யாத்திரையை மேற்கொள்வார்கள். இந்த யாத்திரையின் போது பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சிவபக்தர்கள், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வார், கவுமுக், கங்கோத்ரி உள்ளிட்ட புனித தளங்களுக்குச் சென்று கங்கை நீரை எடுத்துச் செல் வது வழக்கம்.
இந்தப் புனித நீரை, தங்கள் ஊர்களில் உள்ள சிவன் கோயில்களுக்கு கொண்டு சென்று சிவலிங்கங்களுக்கு பூஜை நடத்துவார்கள். இந்த யாத்திரையை ’கன்வர் யாத்திரை’ என்று அழைக்கிறார்கள். இந்த ஆண்டு இந்த யாத்திரைக்கு உத்தரகாண்ட் அரசு தடை விதித் துள்ளது. கொரோனா காரணமாக இந்த தடை விதிக்கப்படுவதாக, அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார்.
ஆனால், வரும் 25 ஆம் தேதி இந்த யாத்திரையை நடத்த உத்தரபிரதேச மாநிலம் இதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த யாத்திரைக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தை, உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த கொரோனா காலகட்டத்தில் இந்த யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டது ஏன் என்று உத்தரபிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
கொரோனா மூன்றாம் அலை பற்றிய அச்சம் பொதுமக்களிடம் இருப்பதால் எவ்வித சமரசமும் செய்ய முடியாது எனப் பிரதமர் மோடி கூறியிருக்கும் நிலையில், உத்தரபிரதேச அரசு எப்படி இந்த முடிவை எடுத்துள்ளது என கேள்வி எழுப்பியுள்ள உச்ச நீதிமன்றம், பின்னர் இந்த வழக்கை ஜூலை 16 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.







