இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி சாம்பியன்ஷிப்பில் விளையாடிய இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 4ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இதற்கு தயாராகுவதற்காக அந்நாட்டு உள்ளூர் டெஸ்ட் தொடரான, கவுண்டி சாம்பியன்ஷிப்பில் சர்ரே அணிக்காக இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் விளையாடினார்.
சாமர்செட் அணிக்கு எதிரான போட்டியில் அஸ்வின், முதல் இன்னிங்ஸில் 99 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். பேட்டிங்கிலும் சோபிக்காத அஸ்வின், டக் அவுட் ஆகி வெளியேறினார். முதல் இன்னிங்ஸில் சாமர்செட் அணி 429 ரன்கள் குவிக்க, அஸ்வின் விளையாடிய சர்ரே அணி 240 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. விரைவில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ள நிலையில், அஸ்வினின் ஆட்டத்திறன் குறித்து சமூக வலைதளங்களில் பலர் விமர்சனங்களை முன்வைத்தனர்.
இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, 2வது இன்னிங்ஸில் அசத்தலாக பந்துவீசிய அஸ்வின், 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஸ்வினின் அபார பந்துவீச்சால் நிலைகுலைந்த சாமர்செட் அணி, 69 ரன்களுக்கு சுருண்டது. இங்கிலாந்து தொடருக்கான அணியில் அஸ்வினின் பங்கு முக்கியமானதாக கருதப்படும் நிலையில், அவரது இந்த பந்துவீச்சு இந்திய ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கையாக அமைந்துள்ளது.







