எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதி விடுவிப்பு; அமைச்சரவை ஒப்புதல்

நிதிச்சுமையால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடும் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதால், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி நிறுத்தி…

நிதிச்சுமையால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடும் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதால், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி நிறுத்தி வைக்கப்படுவதாக, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய அரசு அறிவித்தது. இதனை திரும்பப் பெற வேண்டுமென மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதனிடையே, டெல்லியில் இன்று  மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எம்.பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை விடுவிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.அதன்படி, நடப்பு நிதியாண்டுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியாக 2 கோடி ரூபாய் வழங்கப்படும் என குறிப்பிட்டார்.

எனினும், அடுத்த ஆண்டு முதல், எம்.பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியான 5 கோடி ரூபாயை, 2 தவணையாக பிரித்து, தலா 2 கோடியே 50 லட்சம் ரூபாயாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.