“EWS பிரிவினர் சமூகம்&கல்வியில் பின் தங்கியவர்கள் இல்லை” – உச்சநீதிமன்றம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க எந்த ஆய்வின் அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டது என உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு சரமாரி கேள்வியெழுப்பியுள்ளது. மருத்துவ படிப்பில் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% மற்றும்…

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க எந்த ஆய்வின் அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டது என உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு சரமாரி கேள்வியெழுப்பியுள்ளது.

மருத்துவ படிப்பில் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

முன்னதாக கடந்தமுறை நடந்த வழக்கு விசாரணையில், ரூ.8 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ள பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கிய நடை முறை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இதற்கு பதிலளித்த மத்திய அரசு, இது ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறும் என்றும் எனவே இது தொடர்பாக விரிவான பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என்றும் கூறியிருந்தது. மேலும், இந்த வரையறை அரசின் கொள்கை முடிவு என்றும் தெரிவித்திருந்தது.

இதனையடுத்து இன்று நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு இந்த வழக்கு மீண்டும் வந்தது.

அப்போது நீதிபதி, “வருமான வரம்பாக ரூ.8 லட்சம் என்று நிர்ணயம் செய்திருப்பதை, சும்மா வேறு எங்கிருந்தோ எடுத்து நிர்ணயம் செய்ததாக கருத முடியாது? உச்ச வரம்பு எதன் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டது? எந்த தரவுகள் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது? EWS உச்சவரம்பு கிராம்புறம் மற்றும் நகர்புற மக்களின் வாங்கும் திறன், பொருளாதார நிலைகள் கணக்கிடப்பட்டதா? EWS இட ஒதுக்கீடு வருமான உச்ச வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டபோது வருமான வரி செலுத்தும் வரம்பு கணக்கிடப்பட்டதா?

ஓ.பி.சி பிரிவிலும் ரூ.8 லட்சத்துக்கு குறைவான வருமானத்தில் உள்ளவர்களும் உள்ளனரே, அவர்களும் பாதிப்படைகின்றனரே ? ஒரு விசயத்தை புரிந்துகொள்ள வேண்டும் EWS பிரிவினர் socially & educationally பின் தங்கியவர்கள் இல்லை.

எனவே EWS இடஒதுக்கீடு எதன் அடிப்படையில் நிர்ணயம் செய்ததற்கான தரவுகளை கொடுங்கள். உங்களுக்கு 2 வாரம் அவகாசம் தருகிறோம். பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 % இடஒதுக்கீடு என்ற யோசனையை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் அதை எந்த அடிப்படையில் செயல்படுத்த அரசு நினைக்கிறது எங்களுக்கு தெரிந்தாக வேண்டும்.” என்று காட்டமாக கேள்வியெழுப்பியுள்ளனர்.

மேலும், சமூக நீதி அமைச்சகத்தை இந்த வழக்கில் எதிர் மனுதாரராக சேர்த்தும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.