தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழை- வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் அந்தமான் நிகோபார் தீவை ஒட்டி அசானி புயல் உருவாகி வரும் நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் சில பகுதிகளில் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என…

வங்கக் கடலில் அந்தமான் நிகோபார் தீவை ஒட்டி அசானி புயல் உருவாகி வரும் நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் சில பகுதிகளில் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நேற்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது, வடக்கு திசையில் அந்தமான் நிக்கோபார் தீவு வழியாக நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், தொடர்ந்து புயலாகவும் வலுப்பெறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புயலுக்கு ‘அசானி’ எனப் பெயர் வைத்துள்ள வானிலை மையம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் சில பகுதிகளில் இன்று முதல் அடுத்த நான்கு நாள்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றும் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்றும் நாளையும் அந்தமான் கடல், மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகம் வரை வீச வாய்ப்புள்ளது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாகப்பட்டினம், காரைக்கால், புதுச்சேரி துறைமுகங்களில் 1 எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.