ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஈவிகேஎஸ் இளங்கோவன் நலமுடன் இருப்பதாக அவரது முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 15-ம் தேதி டெல்லியிலிருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னை வந்துள்ளார். அதன்பிறகு அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு முன்னரே இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு போரூர் ராமச் சந்திரா மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட பத்திரிக்கை செய்தியில், “ ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் நலம் பெறுவார்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்த ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஈவிகேஎஸ் இளங்கோவன் தனது அதிகார்ப்பூர்வ முகநூல் பக்கத்தில் நலமுடன் இருப்பதாக பதிவு வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் தெரிவித்திருப்பதாவது..

“ நமது தலைவர் மற்றும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் MLA மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் பூரண நலமுடன் இருக்கிறார். நலம் பெற வாழ்த்திய அனைத்து நல்லுங்களுக்கும் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துள்ள தலைவர் சிறிது ஓய்வுக்கு பின்னர் விரைவில் சட்டமன்ற பணிகளுக்கு திரும்ப ஆர்வமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார் “ என அவரது பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சில ஊடகங்கள் அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் பரப்பி வந்த நிலையில் அவரது உடல்நிலை குறித்து அவரது முகநூல் பக்கத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.







