டெல்லியில் நாளை மற்றும் நாளை மறுநாள் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் புடின் உட்பட பிரிகஸ் அமைப்பில் உள்ள 21 நாடுகளின் அதிபர்கள் மற்றும் பிரதிநிதிகள் டெல்லிக்கு வருகை தந்துள்ளனர்.
இந்த நிலையில் பிரிக்ஸ் வர்த்தக மன்றத்தின் தலைவர்கள் அமர்வில் பிரதமர் மோடி பேசியதாவது, “இந்த ஆண்டு, நாம் பிரிக்ஸ் அமைப்பின் 20வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறோம். 2006-ல் இந்த அமைப்பு தொடங்கப்பட்டபோது, இதில் நான்கு நாடுகள் மட்டுமே இருந்தன. இன்று, பிரிக்ஸ் உறுப்பினர்கள் மற்றும் கூட்டாளிகளைக் கொண்ட நமது குடும்பம் 21 நாடுகளாக வளர்ந்துள்ளது. இன்று, பிரிக்ஸ் நாடுகள் உலகின் மக்கள் தொகையில் 50%, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40%, மற்றும் உலகளாவிய வர்த்தகத்தில் 25%-க்கும் மேலாகப் பங்களிக்கின்றன. மேலும், இந்த ஆண்டுகளில் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி ஏறக்குறைய இரண்டரை மடங்கு வளர்ந்துள்ள நிலையில், பிரிக்ஸ் நாடுகளின் ஒருங்கிணைந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி கிட்டத்தட்ட நானரை மடங்கு விரிவடைந்துள்ளது. வேறுவிதமாகக் கூறினால், பிரிக்ஸ் அமைப்பின் பொருளாதார வலிமை உலகின் மற்ற பகுதிகளை விட கிட்டத்தட்ட இரு மடங்கு வேகத்தில் வளர்ந்துள்ளது. பிரிக்ஸ் நாடுகள் உலகளாவிய புத்தாக்கம் மற்றும் தீர்வுகளுக்கான முக்கிய மையங்களாகவும் உருவாகி வருகின்றன. அடிமட்ட முயற்சிகள் முதல் முன்னணி தொழில்நுட்பங்கள் வரை அனைத்தையும் உள்ளடக்கிய புத்தாக்கத்திற்கான புதிய சாத்தியக்கூறுகள் நமது நாடுகளுக்குள் உருவாகி வருகின்றன. பிரிக்ஸ் அமைப்பின் வளர்ந்து வரும் அளவு, வேகம் மற்றும் நம்பிக்கை ஆகியவை நம்மிடையே தெளிவாகத் தெரிகின்றன.
இந்தியாவில் நடைபெறும் இந்த மன்றம், இதுவரை நடந்த பிரிக்ஸ் வர்த்தக மன்றங்களிலேயே மிகப்பெரியதாகும். இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவத்தின் கருப்பொருள் ‘மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மைக்காகக் கட்டமைத்தல்’ என்பதாகும். கடந்த 12 ஆண்டுகளாக, இந்தியா இந்த மந்திரத்தைத் தனது பொருளாதாரத்தின் அடித்தளமாகக் கொண்டுள்ளது.
2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்கள் மற்றும் 120-க்கும் மேற்பட்ட யூனிகார்ன்களுடன், இந்தியா ஒரு ஸ்டார்ட்அப் புரட்சியைக் கண்டு வருகிறது. செயற்கை நுண்ணறிவு, கல்வி, சுகாதாரம், பசுமை ஹைட்ரஜன், மின்கலங்கள், பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆகிய துறைகளில் உலகளாவிய தீர்வுகளுக்கான மையமாக இந்தியா உருவாகி வருகிறது. பிரிக்ஸ் (BRICS) மூலம், இந்தியாவின் உலகத் தரம் வாய்ந்த கண்டுபிடிப்புகள் உலகை சென்றடைய முடியும்.மேலும் இது, மக்கள் அளவில் நிதி உள்ளடக்கத்தையும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளையும் துரிதப்படுத்தியுள்ளது; உலகின் 50% நிகழ்நேரப் பணம் செலுத்துதல்கள் இந்தத் தொழில்நுட்பத்தின் மூலமே நடைபெறுகின்றன. பிரிக்ஸ் நாடுகளின் புதுமைப் படைப்பாளர்கள் இந்த அனுபவத்தைப் பயன்படுத்தித் தங்கள் சொந்த நாடுகளுக்கான தீர்வுகளை உருவாக்கலாம்.
இன்று, உலகளவில் வர்த்தகத் தடைகள் அதிகரித்து வரும் வேளையில், இந்தியா பொருளாதாரப் பாலங்களைக் கட்டி வருகிறது. 2014 முதல், நாங்கள் கிட்டத்தட்ட 40 நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களில் ஈடுபட்டுள்ளோம். தடைகளைக் குறைப்பதிலும், வணிகங்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதிலும் எங்கள் அணுகுமுறை தொடர்ந்து கவனம் செலுத்துகிறது.
பிரிக்ஸ் தனது மூன்றாவது தசாப்தத்தில் அடியெடுத்து வைக்கும் வேளையில், பிரிக்ஸ் வர்த்தக சபையிடம் நான் ஒரு வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன்: பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான முதல் பத்து வர்த்தகத் தடைகளை நீக்குவது குறித்து ஒரு அறிக்கையை உங்களால் தயாரிக்க முடியுமா? ஆண்டுதோறும் 100 பிரிக்ஸ் புத்தொழில் நிறுவனங்கள் மற்ற பிரிக்ஸ் சந்தைகளில் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்த நம்மால் ஆதரவளிக்க முடியுமா? நம்மால் ஆயிரம் நிறுவனங்களை உருவாக்க முடியுமா?.” இவ்வாறு அவர் பேசினார்.




