மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் சோனம் வாங்சுக் – ராஜ்காட் செல்ல திட்டம்…!

சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

நீட் குளறுபடிகளை கண்டித்து காக்ரோச் ஜனதா கட்சியினர் தொடங்கிய போராட்டத்தில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் பங்கேற்றார். கல்வி அமைச்சர் பதவியிலிருந்து தர்மேந்திர பிரதானை ராஜினாமா செய்ய வலியுறுத்தி அவர் ஜூன் 28 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் தொடங்கினார். டெல்லி ஜந்தர் மந்தரில் 26 நாட்கள் நீடித்த போராட்டத்தில் அவரது உடல் நிலை மோசமடையத் தொடங்கியது.

இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து ஜூலை 18 அன்று அவர் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார்.

இதற்கிடையில் சிஜேபி தலைமையில் நடைபெற்ற 36 நாள் போராட்டத்தின் விளைவாக கல்வி அமைச்சர் பதவியிலிருந்து தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து சனிக்கிழமையன்று போராட்டம் முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இது தொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் “கடந்த 21.07.2026 அன்று மேடான்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனம் வாங்சுக் இன்று மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டார். பொது மருத்துவம், தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் அது சார்ந்த பிற மருத்துவப் பிரிவுகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த சிகிச்சை முறையின் கீழ் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்படும்போது, ​​அவரது உடல்நிலை சீராகவும், அவர் விழிப்புடனும் இருந்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல சோனம் வாங்சுக் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் “இறுதியாக… நான் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புகிறேன். மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்த ராஜ்காட் செல்லவிருக்கிறேன்; அதன்பின் மலைப்பகுதிக்குத் திரும்புவேன். உங்கள் அனைவருக்கும் நன்றி. அதிலும் குறிப்பாக, குர்கானில் உள்ள மேடான்டா (Medanta) மருத்துவமனையின் அற்புதமான மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் குழுவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.