தலைநகரில் 5 வயது குழந்தைக்குக் கூடப் பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

சட்டம் – ஒழுங்கைக் காப்பாற்றத் தவறினால், தவெக அரசுக்குத் தமிழக மக்கள் நிச்சயம் தகுந்த பாடம் கற்பிப்பார்கள் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “சமீபத்தில் கும்மிடிப்பூண்டியில் 3 வயது பிஞ்சுக் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்ட கொடூரச் சம்பவத்தின் துயரத்திலிருந்தே நாம் இன்னும் மீளவில்லை; அதற்குள் அடுத்த கொடூரமாக, சென்னை திருவொற்றியூரில் வடமாநிலத் தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்த 5 வயது பிஞ்சுக் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியிலும் பெருந்துயரிலும் ஆழ்த்தியுள்ளது. வாழ்வாதாரம் தேடி தமிழகத்தை நம்பி வந்த ஏழைத் தொழிலாளியின் குழந்தைக்குத் தலைநகரிலேயே பாதுகாப்பில்லாத அவல நிலையை எண்ணி நெஞ்சம் பதறுகிறது.

பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான இத்தகைய கொடூரங்கள் தமிழகத்தில் அடுத்தடுத்துத் தொடர்கதையாகி வருவது மிகுந்த வேதனையளிக்கிறது. வெற்றுப் பேச்சுகளால் அமைந்த தவெக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு முற்றிலும் முடங்கிவிட்டது. காவல்துறையையும் உள்துறையையும் தன் வசம் வைத்துள்ள முதலமைச்சர் விஜய் செயலற்றுக் கிடப்பதால், பொதுமக்களே வீதியில் இறங்கிக் குற்றவாளிகளைப் பிடிக்கும் அவல நிலை உருவாகியுள்ளது. குற்றவாளிகளுக்குச் சட்டத்தின் மீதான பயம் துளியும் இல்லாமல் போனதற்கும், குற்றங்கள் தலைவிரித்தாடுவதற்கும் இந்த ஆட்சியின் நிர்வாகச் சீர்கேடும் அனுபவமின்மையுமே முக்கியக் காரணம்.

இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிக்கு போக்சோ சட்டத்தின் கீழ் விரைவு நீதிமன்றம் மூலம் அதிகபட்சத் தண்டனையைப் பெற்றுத் தருவதோடு, பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அரசே உயர்தர மருத்துவ சிகிச்சையை முன்னின்று வழங்க வேண்டும். இனியாவது வெற்றுப் பிம்ப அரசியலை விட்டுவிட்டு, பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய முதலமைச்சர் ஜோசப் விஜய் உடனடியாகக் களத்தில் இறங்கிக் கவனம் செலுத்த வேண்டும், சட்டம் – ஒழுங்கைக் காப்பாற்றத் தவறினால், தவெக அரசுக்குத் தமிழக மக்கள் நிச்சயம் தகுந்த பாடம் கற்பிப்பார்கள்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.