‘இந்தியாவில் ஸ்டார்லிங்கை தடுப்பது யார்?’ – எலான் மஸ்க் பரபரப்பு குற்றச்சாட்டு!

இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவை தொடங்குவதை சிலர் தடுத்து வருவதாக எலான் மஸ்க் குற்றம்சாட்டியுள்ளார்.

ஸ்பேஸ்எக்ஸ் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “இந்திய மக்களிடையே தங்களது ஏகபோக ஆதிக்கத்தை தொடர்ந்து நிலைநிறுத்துவதற்காக சிலர் ஸ்டார்லிங்க் சேவையைத் தடுத்து வருகிறார்கள். அவர்கள் யார் என்பதை நீங்கள் யூகிக்கலாம். இது இந்திய மக்களுக்கு எதிரான குற்றம்” என்று தெரிவித்துள்ளார்.

மஸ்க் தனது பதிவில் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. எனினும், இந்தியாவின் தொலைத்தொடர்பு சந்தையில் ஏற்கனவே உள்ள முக்கிய நிறுவனங்கள் குறித்தே அவர் இந்த குற்றசாட்டை கூறியுள்ளார் என்ற கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவையை தொடங்குவதற்கான உள்கட்டமைப்பு பணிகளில் பெரும்பாலானவை முடிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 20 கேட்வே தளங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான ஆன்டெனாக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு இந்தியாவில் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சேவைகளை வழங்குவதற்கான உரிமம் வழங்கப்பட்டுள்ள நிலையில், வர்த்தக ரீதியாக சேவையை தொடங்குவதற்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மற்றும் இறுதி பாதுகாப்பு அனுமதி உள்ளிட்ட சில ஒழுங்குமுறை நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளன. இதற்கிடையே, ஸ்டார்லிங்க் சேவை தாமதத்திற்கு சிலரின் ஆதிக்கமே காரணம் என்ற மஸ்க்கின் குற்றச்சாட்டை இந்திய அரசு நிராகரித்துள்ளது.

செயற்கைக்கோள் இணைய சேவை நிறுவனங்கள் அனைத்தும் ஒரே மாதிரியான ஒழுங்குமுறை நடைமுறைகளையே எதிர்கொள்வதாகவும், தேவையான அனுமதிகள் தொடர்பான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதுடன், மஸ்க் குறிப்பிடும் அந்த‘ சிலர்’ யார் என்ற கேள்வியும் பேசுபொருளாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.