யூரோ கோப்பை கால்பந்து தொடரின் லீக் ஆட்டத்தில், போர்ச்சுகல் அணியை 4-க்கு 2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணி வீழ்த்தியது.
குரூப் “F” பிரிவில் இடம்பெற்றுள்ள போர்ச்சுகல் அணியும், ஜெர்மனி அணியும் நேற்றைய லீக் ஆட்டத்தில் மோதின. போட்டி தொடங்கிய 15வது நிமிடத்தில் நட்சத்திர வீரரும், போர்ச்சுகல் அணியின் கேப்டனுமான ரொனால்டோ முதல் கோலை அடித்து அசத்தினார். ஆனால், 35 மற்றும் 39வது நிமிடங்களில் போர்ச்சுகல் வீரர்களின் சேம் சைட் கோல்களால், ஜெர்மனி 2க்கு 1 என்ற கோல் கனக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதி ஆட்டத்தில் ஜெர்மனி அணி வீரர்கள் 2 கோல்கள் அடிக்க, போர்ச்சுகல் அணியினரால் ஒரே ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால், 4க்கு 2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணி வெற்றி பெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதேபோல், குருப் “E” பிரிவில் இடம்பெற்ற ஸ்பெயின்-போலந்து அணிகள் இடையிலான லீக் ஆட்டம், விறுவிறுப்பாக நடைபெற்றது. இவ்விரு அணிகளும் ஆட்டநேர முடிவில் தலா ஒரு கோல் எடுத்ததால், போட்டி சமனில் முடிந்தது.
நேற்று நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில், ஹங்கேரி- பிரான்ஸ் அணிகள் மோதின. ஆட்டத்தின் 45வது நிமிடத்தில் ஹங்கேரி அணி ஒரு கோல் அடித்தது. இதற்கு பதிலடியாக பிரான்ஸ் அணி 67 நிமிடத்தில் ஒரு கோலை பதிவு செய்தது. இதையடுத்து இறுதி வரை இருஅணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சித்தும் பலனளிக்கவில்லை. இதனால், ஒன்றுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் போட்டி சமனில் முடிந்தது.
இந்திய நேரப்படி இன்று இரவு 9.30 மணிக்கு நடைபெறும் போட்டியில், குரூப் ஏ பிரிவில் உள்ள இத்தாலி மற்றும் வேல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதேபோல், மற்றொரு போட்டியில், அதே குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள சுவிட்சர்லாந்து அணியும், துருக்கி அணியும் மோதுகின்றன.