ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு பிரச்சாரத்தை தொடங்கினார்.
எடப்பாடி பழனிசாமியால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ தென்னரசுவுக்கு, 2665 பொதுக்குழு உறுப்பினர்களில் 2501 பேர் ஆதரவு அளித்துள்ளனர். இந்தநிலையில் பொதுக்குழு உறுப்பினர்கள் அனுப்பிய ஆவணங்களை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் சமர்பித்தார்.
அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கொடுத்த ஆவணங்களை சரி பார்த்த தேர்தல் ஆணையம், அதிமுக வேட்பாளருக்கான ஏ மற்றும் பி படிவங்களில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கையெழுத்திடலாம் என அங்கீகாரம் அளித்தது. இதுதொடர்பான கடிதத்தை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நடத்தும் தேர்தல் அலுவலருக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது.
இதனடிப்படையில் அதிமுக வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு தேர்ந்தெடுக்கபட்டுள்ளார். ஏற்கனவே வேட்பாளர் செந்தில் முருகனை திரும்பப் பெறுவதாக ஓபிஎஸ் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தென்னரசு, முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.வி.ராமலிங்கம் ஆகியோருடன் மணல்மேடு பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். முதலில் அங்குள்ள கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு அதன் பின்னர் வீதி வீதியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்று கடைசிநாள் என்பதால் தென்னரசு இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்.
– யாழன்







