ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு திமுகவினர் டோக்கன் கொடுப்பதாக அமமுக வேட்பாளர் சிவ பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். வெறும் 46 வயதே ஆன திருமகன் ஈவேராவின் மறைவு தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு அதற்கு பிப்ரவரி 27ல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பளார்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக சார்பில் இரண்டு அணிகளாக பிரிந்து எடப்பாடி பழனிசாமி சார்பில் கே.எஸ்.தென்னரசு மற்றும் ஓபிஎஸ் சார்பில் செந்தில் முருகனும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் பிப்ரவரி 27 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளர்களின் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இந்த தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் சிவ பிரசாந்த் தனது
ஆதரவாளர்களுடன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.
டவர் லைன் காலனி, குமலன் குட்டை, வெட்டுக்காட்டு வலசு உள்ளிட்ட பகுதிகளில்
பொதுமக்களை சந்துத்து துண்டு பிரசுரங்களை வழங்கி ஆதரவு திரட்டினார். தங்களது சின்னமான குக்கரை கைகளில் எடுத்து சென்று அமமுக.வினர் வாக்கு சேகரித்தனர்.
அப்போது பேசிய அமமுக வேட்பாளர் சிவ பிரசாத் தெரிவித்ததாவது..
“ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களை சரக்கு வாகனங்களில் ஏற்றிச் சென்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் அவர்களை ஒருங்கிணைத்து ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு வாக்களிக்குமாறு திமுக வினர் அறிவுறுத்துகின்றனர். மேலும் வாக்காளர்களுக்கு திமுகவினர் டோக்கன் வழங்குகின்றனர். எனவே இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளோம்” என சிவ பிரசாத் கூறினார்.
– யாழன்







