தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழ்நாட்டின் ஜீவாதார பிரச்சனைகள் மாநில வளர்ச்சி குறித்த மனுவை இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வழங்குவார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மின் கட்டண உயர்வு சட்ட ஒழுங்கு பிரச்சனை தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது. சென்னையில் அமைப்பு ரீதியிலான 9 மாவட்டங்கள் ஒருங்கிணைந்து நாளை மறுநாள் போராட்டம் நடத்தப்பட உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி
இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்ட பிறகு அவர் தலைமையில் நடைபெறும் முதல் போராட்டம் என்பதால் பிரமாண்டமாக நடத்தத் தேவையான முன்னேற்பாடுகள் தொடர்பாகச் சென்னை மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை நடத்தினர்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மாவட்டச் செயலாளர்கள் ஆதிராஜாராம், பாலகங்கா, சத்யா, வெங்கடேஷ்பாபு, அசோக் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னை மாநகரம் இதுவரை கண்டிராத அளவுக்கு இந்த போராட்டம் நடைபெறும் எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா வை சந்திக்க எடப்பாடி பழனிசாமி நேரம் கேட்டு ஒதுக்கப்படவில்லை எனப் பேசுவது தவறானது எனவும், பிரதமர் சென்னை வரும்போது அதிமுக சார்பில் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்துப் பேசுவார் எனவும் அப்போது மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் ஜீவாதார பிரச்சனைகள் குறித்த மனுவையும் வழங்குவார் எனவும் அவர் கூறினார்.
புதிய மாவட்டச் செயலாளர்களை ஓ.பன்னீர்செல்வம் நியமித்து தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு ஆள் இல்லாத கடையில் டீ ஆத்துவது போல ஓ.பன்னீர்செல்வம் ஆட்களை நியமிக்கிறார் எனவும், ஊர் தோறும் சிலை வைப்பதற்காகவும், நினைவுச் சின்னம் அமைப்பதற்காக மட்டுமே திமுக அரசு செலவு செய்வதாகவும், மக்கள்
நலத்திட்டங்களுக்குச் செலவு செய்ய முன்வரவில்லை எனவும் குற்றச்சாட்டு தெரிவித்தார்.








