குடும்ப கஷ்டம் – உயிரை மாய்த்து கொண்ட தாய், மகள்

தாராபுரம் அருகே குடும்ப கஷ்டம் காரணமாக தாய் மகள் தங்கள் உயிரை மாய்த்து கொண்டனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.   திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த அலங்கியம் காமராஜர் நகரை…

தாராபுரம் அருகே குடும்ப கஷ்டம் காரணமாக தாய் மகள் தங்கள் உயிரை மாய்த்து கொண்டனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த அலங்கியம் காமராஜர் நகரை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 25). கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் பொள்ளாச்சி சாலையில் உள்ள
ஒரு தனியார் நூல் ஆலையில் வேலை செய்து வந்த இவர் நூற்பாலை விடுதியிலேயே உயிரை மாய்த்து கொண்டார். இந்நிலையில், இவரது மனைவி பூங்கொடி (வயது 28) தாராபுரத்தில் உள்ள தனியார் பனியன் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

 

இவருக்கு வர்ஷா என்ற மகள் உள்ளார். அலங்கியத்தில் தனது தாயார் சரஸ்வதி என்பவர் உடன் தங்கி இருந்து தனியார் பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று வந்த பூங்கொடி
கடந்த இரண்டு மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று டிஎன்பிஎஸ்சி தேர்வினை முடித்துவிட்டு தனது தாயாருடன் பூங்கொடி வீட்டில் இருந்துள்ளார்.

அப்போது, கணவரும் இல்லாமல், தனக்கு வேலையும் இல்லாமல் தவித்து வந்ததை நினைத்த பூங்கொடி மனவிரக்தியில், வீட்டில் யாரும் இல்லாதபோது தனது குழந்தை வர்ஷாவை தூக்கில் தொங்கவிட்டு வீட்டில் இருந்த சேலையால் தானும் தூக்கு போட்டு உயிரை மாய்த்து கொண்டார். பின்னர் அவரது தாய் வெளியே சென்று வீட்டிற்கு வந்து பார்த்தபோது, இருவரும் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

 

பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தாய் மகள் 2 பேரின் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே வீட்டில் தாயும் மகளும் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் அலங்கியம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

எதற்கும் உயிரிழப்பு தீர்வாகாது என்பதை வலியுறுத்தி நியூஸ் 7 தமிழ் பல்வேறு விழிப்புணர்வை முன்னெடுத்துள்ளது. மேலும் உயிரிழப்பு எண்ணங்களை யாரும் கையில் எடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்..

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.