அதிமுக தலைமை அலுவலகத்தை சீல் வைத்த உத்தரவை ரத்து செய்ய கோரி கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி ஓ.பன்னீர்செல்வமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. சொத்து உரிமை தொடர்பாக பிரச்னை இருந்தால் மட்டுமே சீல் வைப்பதற்கான சட்டப் பிரிவுகளை அமல்படுத்த முடியும் எனவும், அதிமுக தலைமை அலுவலகத்தை பொறுத்தவரை, சொத்து உரிமை தொடர்பாக எந்த பிரச்னையும் இல்லை எனவும், கட்சியின் தலைமை நிலைய செயலாளர், இடைக்கால பொதுச்செயலாளர் என்ற முறையில் கட்சி அலுவலகத்தின் உரிமை தனக்கு உள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்திருக்கிறார்.
மேலும் அதில் அவர், “பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் தீர்ப்பளிக்கப்படுவதற்கு முன், பன்னீர்செல்வம் தனது ஆட்களுடன் கட்சி அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஓபிஎஸ் தாக்கல் செய்துள்ள மனுவில், “தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கட்சி தலைமை அலுவலகத்துக்குள் நுழைய தனக்கு எல்லா சட்டப்பூர்வ உரிமைகளும் உள்ளது. கட்சி தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டபோது அது எங்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. அதிமுக தலைமை அலுவலகத்தின் உரிமை தொடர்பாக பொது அமைதிக்கு பங்கம் ஏற்பட்டது என்பது தொடர்பான எந்த ஆதாரங்களும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு மனுக்களும் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.








