முக்கியச் செய்திகள் விளையாட்டு

முதல் ஒரு நாள் கிரிக்கெட்: 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து, முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி தொடக்க முதலே தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரரான ஜேசன் ராய் 2ஆவது ஓவரில் 4வது பந்தில் பும்ரா வீசிய பந்தில் போல்டு ஆனார். ரன்கள் எதுவும் எடுக்காமல் அவர் ஆட்டமிழக்க, அதே ஓவரின் கடைசி பந்தில் ஜோ ரூட்டும் டக் அவுட் ஆனார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை சுருட்டி அருமையான தொடக்கத்தை பும்ரா அளித்தார். மூன்றாவது ஓவரில் பென் ஸ்டோக்ஸை டக் அவுட் ஆக்கி அசத்தினார் பந்துவீச்சாளர் ஷமி.

இதையடுத்து, கேப்டன் ஜோஸ் பட்லர் களம் இறங்கினார். தடுமாறிய இங்கிலாந்தின் ஸ்கோரை உயர்த்த நிதானமாக விளையாடினார். அதே நேரம், 6 வது ஓவரை மீண்டும் பும்ரா வீச, பேர்ஸ்டோ 7 ரன்களில் ஆட்டமிழந்து அந்நாட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

பின்னர் வந்த லிவங்ஸ்டனையும் 8 ஆவது ஓவரில் வீழ்த்தினார் பும்ரா. ஜோஸ் பட்லர் 30 ரன்கள் எடுத்திருந்தபோது ஷமி பந்துவீச்சில் சூர்யகுமார் யாதவிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.

கிரெய்க் ஓவர்டன், பிரைடன் கார்ஸ் ஆகியோரின் விக்கெட்டுகளையும் பும்ரா வீழ்த்தி அசத்தினார். இந்த ஆட்டத்தில் அவர் மொத்தம் 6 விக்கெட்டுகளை சுருட்டினார். 7.2 ஓவர்கள் வீசி 19 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்தார்.

ஷமி 3 விக்கெட்டுகளையும், பிரசித் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இவ்வாறாக 25.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த இங்கிலாந்து அணி 110 ரன்களை மட்டுமே எடுத்தது. 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா விளையாடியது.

111 ரன்கள் இலக்கு

111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் புகுந்த தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா, ஷிகர் தவன் தொடக்கம் முதலே அடித்து நொறுக்கினர்.

ரோஹித் சர்மா அரை சதம் விளாசினர். மறுமுனையில் தவனும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சீரான இடைவெளியில் பவுண்டரிகளை விளாசினார்.

இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி உள்பட 6 பந்துவீச்சாளர்கள் முயற்சித்தும் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியவில்லை.

58 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் விளாசி 76 ரன்களைக் குவித்தார் ரோஹித் சர்மா. மறுமுனையில் ஷிகர் தவன் 54 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார்.
இருவரும் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றனர்.
இவ்வாறாக 18.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இந்திய அணி 114 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய பந்துவீச்சாளர் பும்ரா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

மொத்தம் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முதலாவது ஒரு நாள் ஆட்டத்தில் வெற்றியுடன் 1-0 என்ற கணக்கில் இந்தியா தொடங்கியுள்ளது. இரண்டாவது ஒரு நாள் ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 14ம் தேதி நடைபெறவுள்ளது.

முன்னதாக, 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

T20 போட்டி; தெ.ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

G SaravanaKumar

ஃபீனிக்ஸ் போன்று எழுந்து வந்து தமிழர்கள் நெஞ்சில் இடம்பிடித்த அஞ்சலி

EZHILARASAN D

தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலை விற்பனை?

G SaravanaKumar