’ஜெயலலிதாவிற்கு எடப்பாடி பழனிசாமி உண்மையாக இல்லை’ – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

அதிமுக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவிற்கு உண்மையாக இல்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி குரும்பப்பட்டியில் திமுக சார்பில் 1,000 மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா…

அதிமுக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவிற்கு உண்மையாக இல்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி குரும்பப்பட்டியில் திமுக சார்பில் 1,000 மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சேலத்தில் எப்பொழுது வந்தாலும் வரவேற்பு பெரிதாகவும் எழுச்சியாகவும் இருக்கும். கடந்த சட்டமன்ற தேர்தலில் எங்களை ஏமாற்றிவிட்டீர்கள். பிரச்சாரத்திற்கு ஒரு பகுதியாக சென்றோம். மீண்டும் இந்த தவறை செய்யமாட்டார்கள் என்று நம்புகிறேன். நீங்கள் கொடுக்கும் வரவேற்பும் எழுச்சியும் நம்பிக்கை அளிக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் சேலத்திற்கு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறார். அமைச்சர் நேரு, சேலம் மாவட்டத்தையும் திமுகவின் கோட்டையாக மாற்றி காட்டுவார் என்று நம்புகிறேன். திமுகவினர் கட்சிப் பணியில் ஈடுபட்டு, சேலத்தை திமுகவின் கோட்டையாக மாற்றிக் காட்ட வேண்டும்.

20 மாவட்டங்களில் திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழாவை நடத்தி முடித்துவிட்டோம். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழாவை நடத்திக் காட்டுவோம். எடப்பாடிக்கு வந்துவிட்டு எடப்பாடி பழனிச்சாமி பற்றி பேசாமல் போய்விட்டால் அவர் கோபித்துக் கொள்வார். ஜெயலலிதாவிற்கும், சசிகலாவிற்கும் அவர் உண்மையாக இல்லை. கட்சி தொண்டர்கள், தமிழக மக்களுக்கும் அவர் உண்மையாக இல்லை. எடப்பாடி பழனிச்சாமி உண்மையாக இருப்பது மோடி, அமித்ஷா, ஆளுநர் ரவி ஆகியோருக்கு மட்டும்தான்.

தமிழ்நாடு ஆளுநர் அவருக்கு பிடித்த வார்த்தைகளை வைத்துவிட்டு, மற்ற வார்த்தைகளை விட்டுசிட்டார். இதனால் தமிழ்நாடு முதலமைச்சர் சட்டப்பேரவையில், ஆளுநர் இருக்கும்போதே அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார். ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். ஆளுநருக்கு முன்பாகவே எடப்பாடி பழனிச்சாமி, மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேறிவிட்டனர். ஆளுநரை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள் என்று பயந்துவிட்டார்கள்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை மக்கள் தேடி தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. தந்தை பெரியார், அண்ணா இவர்களை நேரில் பார்த்தது கிடையாது. மூத்த முன்னோடிகள் அவருடன் பயணித்து இருப்பார்கள். உங்கள் முகத்தில் அவர்களைப் பார்க்கிறேன்” என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.