கோவை கல்லூரி மாணவி பாலியல் வழக்கு – குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு!

கோவை கல்லூரி மாணவி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருமே குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை சா்வதேச விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகா் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பா் 2-ஆம் தேதி இரவு 20 வயது கல்லூரி மாணவி, ஒண்டிப்புதூரைச் சோ்ந்த 25 வயது ஆண் நண்பருடன் காரில் அமா்ந்து பேசிக் கொண்டிருந்தாா். அப்போது, ஒரே வாகனத்தில் வந்த 3 இளைஞா்கள், ஆண் நண்பரை அரிவாளால் தாக்கிவிட்டு, மாணவியை அங்கிருந்து கடத்தி சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனா். இதுதொடா்பாக வழக்கு பதித்து விசாரணை நடைபெற்ற வந்த நிலையில் சகோதரா்களான சதீஷ் என்ற கருப்பசாமி (30), காளி என்ற காளீஸ்வரன் (21),அவர்களது உறவினரான குணா என்ற தவசி (20) ஆகியோரை போலீஸாா் சுட்டுப் பிடித்தனா்.

இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, ஒரு மாதத்துக்குள்ளாகவே இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, கோவை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த வழக்கு கோவை கூடுதல் மகளிா் நீதிமன்றத்தில் இருந்து கடந்த டிச. 19-ஆம் தேதி மகளிா் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்தநிலையில், கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சாட்சி விசாரணை மற்றும் அனைத்து தரப்பு விவாதங்கள் நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருமே குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் குற்றவாளிகள் மூவருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்து உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.