இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது.
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி ராஞ்சியில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடக்க ஆட்டக்காரர்களாக பின் ஆலனும், டிவோன் கான்வேயும் களமிறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். பின் ஆலன் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கான்வே சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர் 52 ரன்கள் எடுத்து வெளியேறினார். கடைசி கட்டத்தில் தனது அதிரடியை காட்டிய டேரில் மிட்சேல் 30 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 59 ரன்கள் திரட்டினார். இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க வீரர்களாக சுப்மன் கில், இஷான் கிஷன் களமிறங்கினர். இஷான் கிஷன் 4 ரன்னில் அவுட் ஆனார். அடுத்துவந்த ராகுல் திரிபாதி ரன் எதுவும் எடுக்காமல் (0) வெளியேறி ஏமாற்றம் அளித்தார். சுப்மன் கில் 7 ரன்னில் அவுட் ஆன நிலையில் அடுத்து வந்த சூர்யகுமார் கேப்டன் பாண்டியாவுடன் ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியாக ஆடிய சூர்யகுமார் 47 ரன்னில் அவுட் ஆனார்.
கேப்டன் ஹர்திக் பாண்டியா 21 ரன்னில் வெளியேறினார். மற்ற வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட் ஆன நிலையில் இறுதிகட்டத்தில் அதிரடியாக ஆடிய வாஷிங்டன் சுந்தர் 28 பந்துகளில் 50 ரன்கள் குவித்து அவுட் ஆனார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 டி20 தொடரில் 1-0 என்ற புள்ளி கணக்கில் நியூசிலாந்து முன்னிலையில் உள்ளது.