எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் என அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் எவ்வாறாக செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 61 சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில், அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க வேண்டும் என ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமே எதிர்க்கட்சி துணைத் தலைவராக தொடர்ந்து வருகிறார். இதுகுறித்து இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், இபிஎஸ் ஆலோசித்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற தவறியது, பொங்கல் பரிசு தொகுப்பு விவகாரம், அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் உள்ளிட்டவை குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.







