முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல் செய்த அந்த செயல்…விஜய்- அஜித் செய்வார்களா?


எஸ்.இலட்சுமணன்

கட்டுரையாளர்

தமிழ் திரையுலகம்  ஒவ்வொரு காலகட்டத்திலும் இரு இணை உச்சநட்சத்திரங்களின் ராஜ்யத்தை சந்தித்து வந்திருக்கிறது. தியாகராஜ பாகவதர்-பி.யூ.சின்னப்பா, எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல்…இந்த வரிசையில் 4வது தலைமுறையாக விஜய்- அஜித் இரு இணை உச்ச நட்சத்திரங்களாக வலம் வருகின்றனர்.

விஜய்- அஜித் காலம் நடந்துகொண்டிருக்கும்போதே ரஜினி, கமல் காலம் நடந்து கொண்டிருப்பதுதான் தற்போது புதுமை. ரஜினி- கமல் காலம் தமிழ் திரையுலகில் இன்னும் ஓய்ந்துவிடவில்லை அவர்கள் இன்னும் உச்சநட்சத்திரங்களாகவே வலம் வருகின்றனர் என்பதற்கு அவர்களது சமீபத்திய படங்களின் வசூலே சாட்சி. ரஜினி கடைசியாக நடித்த அண்ணாத்த விமர்சன ரீதியில் பல்வேறு பின்னடைவுகளை சந்தித்தாலும், கடுமையான மழை நேரத்திலும் அந்த படம் நல்ல வசூலை ஈட்டியதாகவே திரையுலக பிரமுகர்கள் கூறுகின்றனர். கமல் கடைசியாக நடித்து வெளிவந்த விக்ரம், 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து கடந்த ஆண்டு வசூல் சாதனை படைத்தது. இரு இணை உச்சநட்சத்திரங்களின் பட்டியலில் நீண்ட காலம் அந்த அந்தஸ்தில் வலம் வருபவர்களாக ரஜினியும், கமலும் உள்ளனர். 1975ம் ஆண்டு தொடங்கி சுமார் 48 வருடங்களாக இந்த இருவரின் கொடி தமிழ் திரையுலகில் பறந்து வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த 4 உச்ச நட்சத்திர இருவர்களில், எம்.ஜி.ஆர்- சிவாஜி, ரஜினி- கமல் ஆகிய  இரண்டு இருவர்களது நட்பு சிலிர்க்க வைக்கும். எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும், சினிமாவில் தொழில் ரீதியில் கடுமையான போட்டி இருந்தது. சிவாஜி படத்தில் தொடர்ச்சியாக நடிப்பவர்கள் எம்.ஜி.ஆர் படத்திலும், எம்.ஜி.ஆர் படத்தில் தொடர்ச்சியாக நடிப்பவர்கள் சிவாஜி படத்திலும் நடிக்க தயங்கும் அளவிற்கு இந்த தொழில்போட்டி இருந்தது. ஆனால் இந்த போட்டியை கடந்து இருவரும் அண்ணன் தம்பி போல் நட்பாக இருந்தார்கள். அந்த நட்பை பொதுவெளிகளிலும், பொது மேடைகளிலும் வெளிப்படுத்தியே வந்தார்கள்.

இருவரும் சிறுவயதில் நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்த காலத்திலேயே நல்ல நண்பர்கள்,  மதுரை பாலகாண சபா நாடக குழுவில் சிவாஜி நடித்துக்கொண்டிருந்தபோது, அந்த குழுவின் டெண்ட்  அமைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அருகிலேயே எம்.ஜி.ஆரின் வீடும் அமைந்திருந்தது. அப்போதிருந்தே எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் நல்ல நட்பு இருந்தது. எம்.ஜி.ஆர் வீட்டிற்கு சிவாஜி அவ்வப்போது சாப்பிடச் செல்வது வழக்கம். அப்போது சிவாஜி வர தாமதமாகும்போது எம்.ஜி,ஆர் பசிக்கிறது என்று சாப்பாடு கேட்டால்கூட “கணேசன் வரட்டும் அவனுடன் சேர்ந்த சாப்பிடலாம்” என்று எம்.ஜி,ஆரின் தாய் சத்யா கூறுவாராம். அந்த அளவிற்கு எம்.ஜி.ஆர், சிவாஜி நட்பில் தாய்ப்பாசமும் கலந்து இருக்கிறது.

”இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாதடா
உறவை பிரிக்க முடியாதடா…”  என்று எம்.ஜி.ஆருடனான நட்பு குறித்து புத்தகம் ஒன்றில் நெகிழ்ந்திருக்கிறார் சிவாஜிகணேசன். ஜல்லிக்கட்டு படத்தின் 100வது நாள் விழாவில் சிவாஜிக்கு கேடயம் வழங்கிவிட்டு அவரது கன்னத்தில் முத்தமிட்டு தனது நட்பையும், பாசத்தையும் வெளிப்படுத்தினார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர்- சிவாஜியைப்போலவே ரஜினியும், கமலும் தங்கள் நட்பை பொதுவெளிகளில் வெளிப்படுத்தியுள்ளனர். இன்னும் சொல்லப்போனால் அவர்களைவிட ஒருபடி மேலேயே தங்கள் நட்பு குறித்து பொதுநிகழ்ச்சிகளில் சிலாகித்துள்ளனர்.1975ம் ஆண்டு ரஜினிகாந்த திரையுலகில் அறிமுகமான அபூர்வராகங்கள் படத்தில்  அவருடன் முதன் முறையாக இணைந்து நடித்த கமல்ஹாசன் தொடர்ந்து மூன்று முடிச்சு, 16 வயதினிலே, ஆடுபுலி ஆட்டம், இளமை ஊஞ்சலாடுகிறது என பல படங்களில் ரஜினிகாந்த்துடன் இணைந்து நடித்தார். ஒரு கட்டத்தில் இனி இணைந்து நடிக்க வேண்டாம் என இருவரும் கூட்டாக முடிவெடுத்தனர்.

திரையுலகில் தனித் தனி பாதைகளில், தனி தனி பாணிகளில் அவர்கள் பயணித்தனர். சினிமா என்கிற கால்பந்தில் மைதானத்தில் அவர்கள் இருவரும் எதிர் எதிர் கோல்போஸ்ட்டுகளாக பிரித்து வைக்கப்பட்டாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் நட்பு என்கிற பாதையில் அவர்கள் இருவரும் இணைந்தே பயனித்தனர். இருவருக்கும் இடையேயான தொழில்போட்டி உச்சக்கட்டத்தில் இருந்த காலத்தில் கமல்ஹாசனின் புன்னகை மன்னன் பட வெற்றி விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்றார்.

ரஜினி, கமல் ரசிகர்கள் மோதிக்கொண்டிருந்த காலத்தில் அந்த இரண்டு உச்ச நட்சத்திரங்களுக்கிடையே உள்ள அன்பையும், சகோதரத்துவத்தையும் இரு ரசிகர்களுக்கும் எடுத்துக்காட்டும் வகையில் ரஜினியை புன்னகை மன்னன் 100வது நாள் விழாவிற்கு அழைத்தார் படத்தின் இயக்குநர்  கே.பாலச்சந்தர். அந்த நோக்கத்தை பாலச்சந்தர் கூறியதும் உடனடியாக விழாவில் பங்கேற்க சம்மதித்தார் ரஜினிகாந்த். அதோடு மட்டுமல்லாமல் நிகழ்ச்சியில் பேசும்போது, தனது சக போட்டியாளர் என்பதை துளியும் கருத்தில்கொள்ளாமல் கமல்ஹாசனை மனம் திறந்து பாராட்டினார் ரஜினிகாந்த். கமல்ஹாசன் புன்னகை மன்னனில்  வசூல் மன்னனாக திகழ்கிறார் என்று பாராட்டிய ரஜினி, நடிகனுக்கெல்லாம் நடிகன் கமல்ஹாசன் என புகழாரம் சூட்டினார்.

பின்னர் கமல்ஹாசன் அந்த படவிழாவில் பேசும்போது ரஜினியுடனான தனது நட்பை நெகிழ்ச்சியோடு பதிவு செய்தார். ரஜினி திரையுலகிற்கு வராவிட்டால் நான் இந்த அளவிற்கு வளர்ந்திருக்கமாட்டேன். அவர் எனக்கு பலமான போட்டி,   அசாத்தியமான போட்டி எனக் கூறிய கமல்ஹாசன், ”திரையுலகில் நடந்துசென்று கொண்டிருந்த நான் ரஜினியின் வேகத்தை பார்த்துதான் ஓடக்கற்றுக்கொண்டேன்” எனத் தெரிவித்தார்.

இப்படி தொடர்ந்து தங்களுக்கிடையேயான நட்பு குறித்து ரஜினியும், கமலும் பொதுவெளிகளில் பகிர்ந்துகொண்டு இருவரது ரசிகர்களிடையே இருந்த பகைமை உணர்வை போக்கிவந்தனர். நினைத்தாலே இனிக்கும் சூட்டிங்கிற்காக சென்றபோது இரவெல்லாம் ஊர் சுற்றிவிட்டு பகலில் தூங்க இடம் கிடைக்காதபோது, மரத்தடியில் ஒருவர் முதுகில் ஒருவர் சாய்ந்து தூங்கியது போன்ற தங்களின் மலரும் நினைவுகளை சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் இருவரும் பொது மேடைகளில் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

கமல்ஹாசன் திரைத்துறைக்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக நடைபெற்ற விழாவில் பேசிய ரஜினி, கமல் குறித்து மனம் திறந்து பாராட்டிய விதம் இருவரது நட்பு போட்டி, பொறாமைகளை கடந்தது என்பதை உலகிற்கு உணர்த்தியது. ரஜினியின் பேச்சைக் கேட்டு நெகிழ்ந்த கமல்ஹாசன், ரஜினியை கட்டிப்பிடித்து முத்துக்கொடுத்து தங்களது நட்பின் ஆழத்தை சுட்டிக்காட்டினார்.

விஜய்-அஜித் ஆகியோர் தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக இருவர்களாக வலம் வருகின்றனர். எனவே அவர்களுக்கிடையே நிச்சயம் சிறந்த நட்பு இருக்க வேண்டும். இருவரும் ”ராஜாவின் பார்வையிலே“ என்கிற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். நேருக்கு நேர் படத்தில் சூர்யாவிற்கு பதில் விஜயுடன் முதன் முதலில் இணைந்து நடித்தது அஜித்தான். 10 நாட்கள் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்தனர். ஆனால்  அஜித்தின் கால்ஷிட் பிரச்சனையால் அந்த படத்தில் இருவரும் இணைந்து நடிக்க முடியாமல் போனது. எனவே அஜித்தும், விஜயும் ஒருவரையொருவர் தனிப்பட்ட முறையில் நன்கு அறிந்தவர்களாகவும், நட்பு பாராட்டுபவர்களாகவும் நிச்சயம் இருக்க வேண்டும்.

ஆனால் அந்த நட்பை பொதுவெளியில், எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல் அளவிற்கு விஜயும், அஜித்தும் வெளிப்படுத்தியதில்லை.  ”எல்லாத்துறைகளிலும் போட்டியிருப்பது போல், சினிமாவிலும் விஜய்க்கும் எனக்கும் போட்டியிருக்கிறது. ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் நாங்கள் இருவரும் என்றைக்குமே எதிரிகளாக இருந்தது கிடையாது“ என பில்லா படத்தின்போது நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அஜித் கூறியிருக்கிறார். தாங்கள் இருவரும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் நல்ல மரியாதை வைத்திருப்பதாகவும் மற்றொரு போட்டியில் அவர் தெரிவித்திருக்கிறார்.

அஜித்தின் தன்னம்பிக்கை எனக்கு ரெம்ப பிடிக்கும் என ஒரு பேட்டியில் அஜித்தை மனம் திறந்து பாராட்டியிருக்கிறார் விஜய்.  மாஸ்டர் பட விழாவில் ”என் நண்பர் அஜித் போல் உடையணிந்து வந்துள்ளேன்” என விஜய் கூறியபோது அரங்கம் அதிரும் அளவிற்கு கைத்தட்டல்கள் பறந்தன. இப்படி விஜயும், அஜித்தும் தங்களுக்கிடையேயான நட்பு குறித்து ஆங்காங்கே மேற்கோள்காட்டியிருந்தாலும். இருவரும் ஒரே மேடையிலே தோன்றி பரஸ்பரம் நட்பை பற்றி நெகிழ்ச்சியோடு பேசிய தருணங்கள் மிகவும் அரிதுதான். ஆனால் ரஜினி, கமல் விஷயத்தில் அதுபோன்ற நிகழ்வுகள் ஏராளம். ரஜினி-கமல் போல், விஜய்- அஜித் அவ்வப்போது ஒரே மேடையில் தோன்றி தங்களுக்கிடையேயான நட்பை வெளிப்படையாக வெளிப்படுத்தினால், இருவரது ரசிகர்களுக்கும் இடையே பகைமை உணர்வு தோன்றாது என்கிற கருத்தும் சமூக அக்கறையோடு முன்வைக்கப்படுகிறது.

ரஜினி-கமல் சந்திப்பு போன்று விஜய்- அஜித் சந்திப்புகள் அடிக்கடி நிகழ்ந்தால், இருவரும் நடித்த படங்கள் ஒரே நேரத்தில் வெளியாவது வாரிசு- துணிவு மோதல் போல் அரிதாக இருக்காது, அடிக்கடி சாத்தியமாகும். பரஸ்பரம் நட்பை பொதுவெளிகளில் விஜய்- அஜித் வெளிப்படுத்தினால், அவர்கள் நடித்த படங்கள் ஒரே நேரத்தில் வெளிவரும்போது ரசிகர்கள் மோதலால் அசம்பாவிதங்கள் நிகழுமோ என்கிற அச்சம் தேவைப்படாது. விஜய்- அஜித்துக்கிடையே உள்ள நட்பைப் போல அவரது ரசிகர்களிடையேயும் நட்பு மேலோங்கும் என்கிற கருத்தும் முன் வைக்கப்படுகிறது.

-எஸ்.இலட்சுமணன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு கல்லூரிகள் திறப்பு; தமிழிசை சௌந்தரராஜன்

G SaravanaKumar

இறுதி போட்டிக்குள் நுழைவது யார்? இந்தியா-இங்கிலாந்து இன்று மோதல்

G SaravanaKumar

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம்: ஓபிஎஸ் பரபரப்பு வாக்குமூலம்

Janani