முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தலித் பிரதிநிதிகள் முழு அதிகாரத்துடன் செயல்படுவதை உறுதி செய்க :கே.பாலகிருஷ்ணன்

தலித் தலைவர்கள் சுதந்திர தின கொடியேற்றும் உரிமையில் தமிழ்நாடு அரசு தலையிட்டு இருப்பது வரவேற்புக்குரியது. அதோடு தலித் பிரதிநிதிகள் முழு அதிகாரத்துடன் செயல்படுவதை உறுதி செய்ய தமிழக அரசுக்கு சிபிஐ (எம்) வலியுறுத்தல்.

இந்தியாவின் 75வது சுதந்திர தின விழாவில் எவ்வித சாதிய பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களைக் கொண்டு அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளின் தலைமை அரசு அலுவலகங்களில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்துவதை உறுதி செய்யுமாறு சமீபத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் தலைமை செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டிருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இது குறித்து அறிக்கை வெளியிட்டு சிபிஐ (எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது; தமிழ்நாட்டில், பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஊராட்சிகளில் பல்வேறு விதமான தீண்டாமைக் கொடுமைகள் நிலவுகின்றன. சில தொகுதிகளில் தேர்தல் நடத்தவே போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. தேர்தல் நடந்து ஊராட்சி தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்படும் தலித் பிரதிநிதிகள் நாற்காலியில் அமர அனுமதிக்கப்படுவதில்லை, முறையாக செயல்பட ஒத்துழைப்பதில்லை, சுதந்திர தினத்தில் கொடியேற்ற அனுமதிப்பதில்லை என்பது உள்ளிட்டு பல்வேறு விதமான தீண்டாமை சம்பவங்கள் இன்றும் தொடர்கின்றன. பெயர் பலகை இல்லை, நாற்காலியில் அமர முடியவில்லை, அலுவலகம் செல்ல முடியாத நிலை, அலுவலகத்தின் சாவியே கிடைக்காத நிலை, தாக்குதல்,மிரட்டல் என பலவிதமான கொடுமைகளை தலித் ஊராட்சித் தலைவர்கள் அனுபவித்து வருகின்றனர்.

சுதந்திரத்தின் பவள விழாவில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இது தொடர்பாக கள ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில் 20 ஊராட்சிகளில் தலித் பிரதிநிதிகள் தேசிய கொடியை ஏற்ற முடியாத நிலைமை வெளிப்பட்டுள்ளது. விடுதலை பெற்று 75 ஆண்டுகள் நிறைவுபெறும் நிலையில் இதுபோன்ற தீண்டாமைக் கொடுமைகள் நீடிப்பது வன்மையான கண்டனத்திற்குரியதாகும். இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டுள்ள தமிழ்நாடு அரசு, அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் நேர்முகக் கடிதம் அனுப்பியுள்ளது. அதில் தீண்டாமை சட்டப்படியாக ஒழிக்கப்பட்டுள்ளதை எடுத்துக்காட்டியுள்ளதுடன், சுதந்திர தினப் பெருவிழாவில் எவ்வித சாதிய பாகுபாடும் இன்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களைக் கொண்டு அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளின் தலைமை அரசு அலுவலகங்களில் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்துவதை உறுதி செய்திட வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் இந்த உடனடி தலையீடு வரவேற்புக்குரியதாகும். இதுமட்டுமின்றி பெண்கள், தலித் உட்பட தேர்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் அவர்களுக்குரிய அதிகாரத்துடன் முழுமையாக செயல்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்திட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு சார்பில் வலியுறுத்துகிறோம், என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

’மஞ்சப்பை நோக்கி பின் சென்றாலும் வாழ்க்கையில் முன்னோக்கிச் செல்ல வேண்டும்’

Arivazhagan Chinnasamy

சென்னையின் அடையாளம்: மத்திய சதுக்கம் நாளை திறப்பு

EZHILARASAN D

நெல்லை கண்ணன் மறைவு; கி.வீரமணி இரங்கல்

G SaravanaKumar