நாட்டுக்காக உயிர் நீத்த லட்சுமணன் உடல் முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம்

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளின் சதிச்செயலை முறியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல், மதுரை அருகே உள்ள அவரது சொந்த ஊரில் முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.…

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளின் சதிச்செயலை முறியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல், மதுரை அருகே உள்ள அவரது சொந்த ஊரில் முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் அருகே உள்ள டி.புதுப்பட்டியைச் சேர்ந்த லட்சுமணன் ஜம்முகாஷ்மீரில் உள்ள ராணுவ முகாமில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் ஜம்மு காஷ்மீரில் உள்ள ரஜ்ஜவுரி மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய உயிரிழப்பு படை தாக்குதலை முறியடிக்க ராணுவத்தினர் தீவிரவாதிகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இந்த மோதலில் தமிழக வீரர் லட்சுமணன் உள்பட 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த லட்சுமணனின் உடல் இன்று விமானம் மூலம் மதுரை கொண்டுவரப்பட்டது. மதுரை விமான நிலையத்தில்  லட்சுமணன் உடலுக்கு தமிழ்நாடு நிதியமைச்சர்  பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை,   மதுரை மேயர் இந்திராணி, மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் லட்சுமணனின் உடல் அவரது  சொந்த ஊரான மதுரை திருமங்கலம் அடுத்துள்ள டீ புதுப்பட்டி கிராமத்திற்கு ராணுவ வாகனத்தில் கொண்டுவரப்பட்டது.  அங்கு அமைச்சர்கள், தங்கம் தென்னரசு, ராமச்சந்திரன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்,  முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் அரசுதுறை அதிகாரிகள் உள்ளிட்டோர் ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட 20 லட்ச ரூபாய்க்கான காசோலை மாவட்ட நிர்வாகம் சார்பில் லட்சுமணனின் பெற்றோரிடம் வழங்கப்பட்டது.

இதையடுத்து லட்சுமணன் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு  அவரது சொந்த விவசாய நிலத்தில்,  21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர் விளையாடிய கிரிக்கெட் மட்டை பேட்டும் உடன் வைத்து  அடக்கம் செய்யப்பட்டது. நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த லட்சுமணனின் இறுதி ஊர்வலத்தில் பொதுமக்கள், அரசியல் கட்சியினர், ராணுவ உயர் அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.