எண்ணூர் எண்ணெய் கசிவு – பறவைகள் மீது படிந்துள்ள கழிவுகளை நீக்கும் பெசன்ட் மெமோரியல் கால்நடை மருத்துவமனை குழு!

சென்னை எண்ணூர் பகுதியில் எண்ணெய் கழிவு தேங்கியதில், பாதிக்கப்பட்ட பல்வேறு வகை பறவைகளை மீட்கும் பணியில் பெசன்ட் மெமோரியல் கால்நடை மருத்துவமனை குழு ஈடுபட்டுள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்பால் சென்னை நகரம் முழுவதும் வெள்ளத்தால்…

சென்னை எண்ணூர் பகுதியில் எண்ணெய் கழிவு தேங்கியதில், பாதிக்கப்பட்ட பல்வேறு வகை பறவைகளை மீட்கும் பணியில் பெசன்ட் மெமோரியல் கால்நடை மருத்துவமனை குழு ஈடுபட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் பாதிப்பால் சென்னை நகரம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மூழ்கிய நிலையில்,  வடசென்னை பகுதியில் மழைநீருடன் கச்சா எண்ணெய் கழிவுகளும் கலந்ததால் முகத்துவார பகுதியில் மீன்கள் செத்து மிதந்தன.  மேலும் எண்ணெய் படலங்கள் அருகில் உள்ள குடியிருப்புகளிலும் படர்ந்ததால் வீடுகள் முழுவதும் எண்ணெய் படலமாக காட்சி அளிக்கிறது.

மேலும் கடலில் 20 சதுர கிலோ மீட்டர் தூரத்திற்கு எண்ணெய் கலந்துள்ளதாக கடலோர காவல்படை நடத்திய ஆய்வில் தெரியவந்தது.  இதனையடுத்து கடலில் பரவி உள்ள எண்ணெய் கழிவுகள் மேலும் பரவுவதை தடுக்க கடலோர காவல் படை ஹெலிகாப்டர் மூலம் ஆயில் ஸ்லிட் டிசால்வன்ட் (ஓ.எஸ்.டி) என்னும் எண்ணெய் கரைப்பானை கடலில் தெளித்தனர்.

இதனையடுத்து கொசஸ்தலை ஆற்றில், எண்ணூர் முகத்துவார பகுதியில் கடந்த 5-ம் தேதி அன்று ஏற்பட்ட எண்ணெய் கசிவினை அகற்றிட தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்நிகழ்வில் காட்டுக்குப்பம், சிவன்படை குப்பம், எண்ணூர் குப்பம், முகத்துவாரகுப்பம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், வ.உ.சி.நகர், உலகநாதபுரம் மற்றும் சத்தியவாணி முத்து நகர் உள்ளிட்ட கடலோர மீனவ கிராமங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளில் எண்ணெய் படிந்து சேதம் ஏற்பட்டது.

மேலும், இக்கிராமங்களை சார்ந்த மீனவர்கள் எண்ணெய் கசிவினால் மீன்பிடித் தொழிலுக்கு செல்ல இயலாததால் மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது. இந்த எண்ணெய் கழிவுகளில் மனிதர்கள் மட்டுமல்லாது, பல பறவைகளுக்கும் தனது அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஆலா, கொக்கு, குளத்து கொக்கு, நீர்க்காகம், மஞ்சள் மூக்கு நாரை மற்றும் கூழைக்கடா போன்ற பறவை இனங்கள் இந்த எண்ணெய் கழிவுகளால் பாதிக்கப்பட்டன. 

இவற்றில் பல பறவைகள் எண்ணெய்யில் நனைந்ததால், அதிக உயரத்தில் பறக்க முடியாமல் தவித்து வந்தன. மேலும், அவைகள் எண்ணெயில் மூழ்கி இறந்த மீன்களை உண்ணவும் முயன்றதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறாக உடல்நிலை மோசமடைந்து வரும் பறவைகளை பாதுகாப்பாக பிடித்து அவற்றை மீட்க பெசன்ட் மெமோரியல் கால்நடை மருத்துவமனை திட்டமிட்டது.

பின்னர் அவ்வாறாக பாதிக்கப்பட்ட பறவைகளை அந்த குழுவினர் மீட்டு, அந்த பறவைகளின் மேல் படிந்துள்ள எண்ணெய் கழிவுகளை நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட பறவைகளை உன்னிப்பாக கண்காணிக்கும் பணியில் அந்த குழுவினர் ஈடுபட்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். 

“இந்த பேரழிவில் நாங்கள் உண்மையிலேயே அதிர்ச்சியடைந்துள்ளோம். சதுப்புநிலங்கள், கடல், பறவைகள் மற்றும் மீனவர்கள் இந்த சோகத்தை முறியடிப்பார்கள் என்று நம்புகிறோம்.” என பெசன்ட் மெமோரியல் கால்நடை மருத்துவமனை குழு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.