முக்கியச் செய்திகள் செய்திகள் விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: 141 ரன்களுக்கு சுருண்டது பாக்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 141 ரன்களுக்கு சுருண்டது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி, கார்டிப்பில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்கள் இமாம் உல் ஹக், பஹர் ஜமான் களமிறங்கினர். இமாம், ரன் கணக்கை தொடங்காமலேயே சகிப் முகமது பந்துவீச்சில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் பாபர் அசாமும் சகிப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னால் வந்தவர்களும் நிலைத்து நிற்காததால், அந்த அணி 35.2 ஓவர்களிலேயே 141 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பரிதாபமாக இழந்தது.

பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக, பஹார் ஜமான் 47 ரன்களும் சதாப் கான் 30 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் சொல்லிக் கொள்ளும்படி நின்று ஆடவில்லை.

இங்கிலாந்து தரப்பில் சகிப் முகமது 4 விக்கெட்டுகளையும் கிரேக் ஒவர்டான், பார்க்கின்சன் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங்கை தொடங்கியுள்ளது. பில் சால்ட்டும் டேவிட் மலனும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி ஆடி வருகின்றனர்.

முன்னதாக, இங்கிலாந்து அணியினருக்கு இரு தினங்களுக்கு முன், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், கிரிக்கெட் வீரர்கள் 3 பேர், அணி நிர்வாக உறுப்பினர்கள் 4 பேர் என மொத்தம் 7 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் உட்பட அனைவரும் தனிமைப்படுத்தப் பட்டனர்.

இதையடுத்து ஐபிஎல் போட்டியில் அடைந்த காயம் காரணமாக, ஓய்வில் இருந்த பென் ஸ்டோக்ஸ் தலைமையில் புதிதாக இங்கிலாந்து அணி உருவாக்கப்பட்டது. இதில் 9 வீரர்கள் புதுமுகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

16 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்: போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

Vandhana

பாஜகவில் இணைந்தார் முன்னாள் திரிணாமூல் எம்.பி தினேஷ் திரிவேதி!

Halley karthi

நடிகர் அக்‌ஷய் குமார் தாயார் காலமானார்

Ezhilarasan