அறிமுக போட்டியில் இரட்டை சதம் விளாசிய கான்வே.. முதல் இன்னிங்ஸில் 378 ரன்னுக்கு நியூசி. ஆல் அவுட்!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் அறிமுக வீரர் டேவான் கான்வே இரட்டை சதம் அடித்து அசத்தினார். கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2…

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் அறிமுக வீரர் டேவான் கான்வே இரட்டை சதம் அடித்து அசத்தினார்.

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று தொடங்கியது.

முதலில் நியூசிலாந்து அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் லாதமும், அறிமுக வீரர் டேவான் கான்வேயும் களம் இறங்கினர். டாம் லாதம் 23 ரன்களிலும் அடுத்து வந்த கேப்டன் வில்லியம்சன் 13 ரன்களிலும் அனுபவ வீரர் ராஸ் டெய்லர் 14 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒரு புறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்ற டேவான் கான்வே, 163 பந்துகளில் தனது முதல் சதத்தை அடித்தார்.

இதன் மூலம் அறிமுக டெஸ்டில் சதம் விளாசிய 12-வது நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றார். நேற்றையை ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 246 ரன்கள் சேர்த்தது. டேவான் கான்வே 136 ரன்னுடனும், ஹென்றி நிகோல்ஸ் 46 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடர்ந்தது. ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்துகொண்டிருக்க நிலைத்து நின்று ஆடிய டேவோன் கான்வே, சிறப்பாக ஆடி இரட்டை சதம் அடித்தார். இதற்காக அவர் 347 பந்துகளை எதிர்கொண்டார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். அவருக்கு துணையாக நின்ற நீல் வாக்னர் 25 ரன்கள் சேர்த்தார். நியூசிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 378 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

இங்கிலாந்து தரப்பில் ஓலி ராபின்சன் 4 விக்கெட்டுகளையும் மார்க் வுட் 3 விக்கெட்டுகளையும் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் தனது முதல் இன்னிங்ஸை இங்கிலாந்து அணி தொடங்கியது. ரோரி பர்ன்ஸ், டாம் சிப்ளி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். டாம் ரன் கணக்கை தொடக்காமலேயே ஜாமீசன் பந்துவீச்சிலும் அடுத்து வந்த ஜாக் கிராவ்லி 2 ரன்களில் சவுதி பந்துவீச்சிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அந்த அணி, 7 ஓவர்கள் முடிவில் 23 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது. ரோரி பர்ன்ஸ் 15 ரன்களுடன் கேப்டன் ஜோ ரூட் 5 ரன்னுடன் ஆடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.