சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அலுவலகத்தில் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான 2026 -27 ஆம் ஆண்டு தரவரிசை பட்டியலினை உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் வெளியிட்டார். அப்போது பேசியவர், “தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வுக்கு இந்த ஆண்டு விண்ணப்ப பதிவு செய்து பதிவுக்கட்டணம் செலுத்திய மாணாக்கர்களின் எண்ணிக்கை 2,45,205. இந்த ஆண்டு தரவரிசை எண் வழங்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 1,30,767. மாணவிகளின் எண்ணிக்கை 1,05,245, மூன்றாம் பாலினத்தவர் 5, மொத்த எண்ணிக்கை 2,36,017.
அரசு பள்ளிக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் 50,494 மாணவர்கள் விண்ணப்பம், இதில் 46,604 மாணவர்கள் பட்டியலில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விளையாட்டு வீரர்கள் பிரிவில் 3210, ராணுவ வீரர்கள் வாரிசு 1176, மாற்றுத்திறனாளிகள் 500 பேர் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களில் 53 பேர் 200-க்கு 200 கட் ஆப் பெற்றுள்ளனர். பொறியியல் கல்விக்கான பொது கலந்தாய்வு ஜூலை 13ம் தேதி தொடங்கும்.
தரவரிசை பட்டியலில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அக்சிதா முதலிடம் பிடித்துள்ளார். திருப்பூரை சேர்ந்த ரோஹித் பாலன் இரண்டாம் இடம், நாமக்கல்லை சேர்ந்த வெங்கடகிருஷ்ணன் மூன்றாம் இடம் பிடித்துள்ளனர். அரியலூர் மாணவி ரக்ஷிதா 4ம் இடம் பிடித்துள்ளார். கன்னியாகுமரியை சேர்ந்த ரத்தன் ஐந்தாம் இடம் பிடித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.




