“மருத்துவக் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது” – பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்!

அதிக கட்டணம் வசூலிக்கும் மருத்துவக் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

மருத்துவக் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “தமிழகத்தின் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. தேசிய மருத்துவ ஆணையம் (NMC) விதிமுறைப்படி கல்லூரிகள் 5 அல்லது 5.5 ஆண்டுகளுக்குக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று NMC மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள் திட்டவட்டமாகக் கூறியுள்ளன.

எம்.பி.பி.எஸ். (MBBS) படிப்பின் கல்விக்காலம் நான்கரை ஆண்டுகள் மட்டுமே. ஆனால், சில மருத்துவக் கல்லூரிகள் ஐந்து ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணத்தை வசூலிப்பதாக கூறப்படுகிறது. இது மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் கூடுதல் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்துவதுடன், நியாயமான நடைமுறையாகவும் தெரியவில்லை. எனவே, விதிமுறைகளை மீறி கூடுதல் கட்டணம் அல்லது நான்கரை ஆண்டுகள் மட்டுமே கல்விக்காலம் இருந்தும் ஐந்து ஆண்டுகளுக்கான கட்டணத்தை வசூலிக்கும் மருத்துவக் கல்லூரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், மருத்துவக் கல்வித் துறை மற்றும் அதனைச் சார்ந்த அமைச்சர் இந்த விவகாரத்தை நேரடியாகக் கண்காணித்து, இனி இதுபோன்ற தவறுகள் எந்த மருத்துவக் கல்லூரியிலும் நடைபெறாத வகையில் கடுமையான கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகளை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.