“இனிப்பு வகைகளை வேண்டுமென்றே சாப்பிடுகிறார்” – கெஜ்ரிவால் மீது அமலாக்கத் துறை குற்றச்சாட்டு!

இனிப்பு வகைகளை வேண்டுமென்றே சாப்பிட்டு,  தனது சர்க்கரை அளவை அதிகரித்து அதன் மூலமாக பிணை பெற கெஜ்ரிவால் முயற்சிப்பதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.  மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த்…

இனிப்பு வகைகளை வேண்டுமென்றே சாப்பிட்டு,  தனது சர்க்கரை அளவை அதிகரித்து அதன் மூலமாக பிணை பெற கெஜ்ரிவால் முயற்சிப்பதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. 

மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21 ஆம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  கெஜ்ரிவால் தரப்பிலிருந்து டெல்லி உயர் நீதிமன்றத்தில்,  தேர்தல் நடைபெறும் சமயத்தில் அமலாக்கத் துறையினர் கைது செய்தது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு மீது நடந்த முதல் விசாரணையின் போது ஒத்திவைக்கப்பட்டது. அதனையடுத்து கடந்த ஏப். 9 ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தான் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பளித்தது. 

இதனையடுத்து கடந்த ஏப். 10 ஆம் தேதி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.  இந்த மனு கடந்த 15 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.  இந்த விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம் அவரது காவலை ஏப். 23 ஆம் தேதி நீட்டித்துள்ளது.  இந்நிலையில், தனது சர்க்கரை அளவை தொடர்ந்து சோதிக்கவும்,  குடும்ப மருத்துவரிடம் காணொலியில் உரையாடவும் அனுமதி கோரி மனு ஒன்றை கெஜ்ரிவால் தாக்கல் செய்தார்.  இந்த மனுவை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா விசாரித்தார்.

விசாரணையின் போது அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்குரைஞர் சோயிப் ஹுசைன்,  “நீரிழிவு அதிகமாக இருப்பதால் வீட்டுமுறை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
சர்க்கரை அளவு அதிகரித்துவிட்டதாாக மருத்துவ காரணங்களை காட்டி ஜாமீன் பெற வசதியாக அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகளை உண்கிறார்” என வாதிட்டார்.

இதற்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் விவேக் ஜெயின் ஆட்சேபம் தெரிவித்துடன்,  “ஊடக வெளிச்சம் பெற அமலாக்கத் துறை இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன் வைப்பதாாகவும்,  தற்போது இந்த மனுவை திரும்ப பெற்று,  திருத்தம் செய்து தாக்கல் செய்வதாகவும்” தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து,  கெஜ்ரிவாலுக்கு திஹார் சிறையில் அளிக்கப்படும் உணவு குறித்த விவரங்களை தாக்கல் செய்ய,  சிறை நிர்வாகத்துக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.