பொள்ளாச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த காலி கேஸ் டேங்கர் லாரி, திருப்பூர் பழங்கரை நெடுஞ்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில், லாரியின் முன்பகுதி முழுவதும் எரிந்து நாசமாகியது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே காட்டம்பட்டியில் உள்ள இன்டேன் கேஸ் சேமிப்பு கிடங்கில், கேஸ் இறக்கி விட்டு சென்னை நோக்கி காலி டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து பழங்கரை பைபாஸ் சாலையில் லாரிகள் நிறுத்தி ஓய்வெடுக்கும் இடத்தின் அருகில் ஓய்வெடுப்பதற்காக லாரியை நிறுத்திய போது, தீ பிடித்தது.
லாரியின் ஓட்டுநரான, ஈரோடு பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த ரவி, தண்ணீர் ஊற்றி அணைக்க முற்பட்ட போது, தீ மளமளவென பரவியது. இதைக்கண்ட ரவி லாரியில் இருந்து குதித்ததால் உயிர் தப்பினார். இத்தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த, அவிநாசி மற்று திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறையைச் சார்ந்த 20 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இவ்விபத்தில் லாரியின் முன் பகுதி முழுவதும் எரிந்து சேதமானது. மேலும் இந்த தீ விபத்து குறித்து அவிநாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
—சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: