ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணையில் அதிகப்படியான ரசாயனம் கலப்பதால், தென்பெண்ணை ஆறு நுரை பொங்கி வெளியேறுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மவட்டம் ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்கத்திற்கு விநாடிக்கு 340 கனஅடி நீர் வரத்து உள்ளது. அந்த நீர் 3 மதகுகள் வழியாக தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் முழுக்கொள்ளளாவன 44.28 அடிகளில் தற்போது 41.49 அடிகள் நீர் சேமிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து வெளியேற்றப்படும் தென்பெண்ணை ஆற்று நீரில், குவியல் குவியலாக நுரைப்பொங்கி காணப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகா மாநில தென்பெண்ணை ஆற்றங்கரையோர தொழிற்சாலைகள் ரசாயன கழிவுகளை ஆற்றில் கலப்பது வழக்கமாக கொண்டுள்ளனர் என்றும், தற்போது தென்பெண்ணை ஆற்றில் குவியல் குவியலாக செல்லும் ரசாயன நுரை துர்நாற்றம் வீசுவதோடு வெள்ளை நிறத்தில் பணிப்போர்த்தியது போல் காணப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
—சௌம்யா.மோ






