ஆத்துார் அருகே கெங்கவல்லி அரசு மருத்துவமனையின் நுழைவு வாயிலில் ஊழியர்கள் மருத்துவ கழிவுகளை கொட்டி வைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே கெங்கவல்லி அரசு மருத்துவமனைக்கு பல பகுதிகளிருந்து பொதுமக்கள் சிகிச்சைக்காக நாள்தோறும் நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இம்மருத்துவமனையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் மருத்துவமனையில் பயன்படுத்திய ஊசிகள், கட்டு துணிகள், சுத்தம் செய்ய பயன்படுத்திய பஞ்சுகள் அனைத்தையும் எடுத்து சென்று அப்புறப்படுத்தாமல் மருத்துவமனை வாயில் முன்பு சாலையின் ஓரத்தில் ஊழியர்கள் போட்டுள்ளனர்.
மேலும் வாகனங்கள் வேகமாக செல்லும்போது குப்பைகள் பறந்து சுகாதார சீர் கேட்டினை ஏற்படுத்துகின்றன. அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அரசு மருத்துவமனை நிர்வாகம் மருத்துவ கழிவு பொருட்களை பாதுகாப்பாக எடுத்து சென்று அப்புறப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
– அனகா காளமேகன்






