காலநிலை மாற்றத்திற்கான அவசரநிலை பிரகடனத்தை உடனே செயல்படுத்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அபாயத்தை தடுக்க காலநிலை அவசரநிலை பிரகடனத்தை உடனடியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சென்னை பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை பகுதியில் பசுமைத்…

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அபாயத்தை தடுக்க காலநிலை அவசரநிலை பிரகடனத்தை உடனடியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை பகுதியில் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில், பாமக தலைவர் அன்புமணி தலைமையில் ஜி20 நாடுகள் மாநாடு மற்றும் ஐநா காலநிலை மாநாடு ஆகியவற்றில் காலநிலை மாற்றத்தைத் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க கோரி விழிப்புணர்வு மனித சங்கிலி பேரணி நடைபெற்றது. இதில் பசுமை தாயகம் அமைப்பின்தலைவர் சௌமியா அன்புமணி, செயலாளர் அருள் உள்ளிட்ட500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேரணியில் ஐ நா பொதுச் செயலாளர் அறிவுறுத்தியபடி காலநிலை தொடர்பான ஒற்றுமை ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

விழிப்புணர்வு பேரணியில் பேசிய பாமக தலைவர் அன்புமணி, காலநிலை மாற்றப் பிரச்சனை மிகப் பெரிய பிரச்சனையாக உருவாகியிருப்பதாக கூறினார். இதனால் கடுமையான வறட்சி, பெருமழை போன்ற பேரிடர்கள் ஏற்பட்டு வருதாக கூறிய அன்புமணி, உலக வெப்பநிலை 1.2 டிகிரி செல்சியஸ் உயர்ந்த நிலையில், அதுபற்றி இந்திய அரசு கவலையில்லாமல் இருப்பதாக தெரிவித்தார். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அழிவுகளை சாதாரண முறையில் சரிசெய்ய முடியாது என்பதால்தான் காலநிலை அவசர பிரகடனத்தை வெளியிடச் சொல்வதாக அன்புமணி தெரிவித்தார்.

மேலும் இந்தியாவில் வரும் செப்டம்பர் மாதம் G20 நாடுகள் மாநாடும், ஐக்கிய அரபு அமீரகத்தில் நவம்பர் மாதததில் ஐ.நா. காலநிலை மாநாடும் நடைபெறவிருப்பதை குறிப்பிட்ட அன்புமணி, காலநிலை மாற்றம் தொடர்பான முடிவுகளை மேற்கொள்வதில் இந்த மாநாடுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றார். ஜூலை 28 ,29 ஆம் தேதிகளில் சென்னையில் ஜி20 நாடுகளின் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் கூடவிருப்பதை தெரிவித்த அன்புமணி, அவர்களுக்கு காலநிலை குறித்த அழுத்தம் கொடுக்கவும், G20 தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்கவும் தான் இந்த பேரணி நடைபெறுவதாக கூறினார்.

  • பி. ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.