மகளிர் உரிமைத்தொகை விண்ணப்ப பதிவிற்கான முகாமை தருமபுரி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டதை தொடர்ந்து, ரேஷன் கடை பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று, மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பம் மற்றும் டோக்கன்களை விநியோகித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த திட்டத்துக்கான விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்ய தமிழ்நாடு முழுவதும் 36 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த முகாமை, தருமபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது தொடங்கி வைத்தார். முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.







