நிலத்தில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரிய உயிரினமான யானை, அண்மைக் காலமாக விபத்துகளில் சிக்கி உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. இதற்கான காரணம் என்ன? மனித – யானை மோதல் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பற்றி விரிவாகக் காணலாம்.
பார்க்கப் பார்க்க சலிக்காத உயிரினம் யானை. நீண்ட தந்தம் பிரமாண்ட உருவம் என யானையை ரசிக்க ஆயிரம் காரணங்கள் உண்டு. மனிதனுக்கு அடுத்து அறிவாற்றல் மிக்க தரைவாழ் உயிரினமான யானையின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருகிறது. இந்திய அரசின் 2017 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மொத்தம் 27 ஆயிரம் யானைகளே உள்ளன. தமிழ்நாட்டில் 2,700 யானைகள் மட்டுமே உள்ளன. ஆண்டுதோறும் சுமார் 100 யானைகள் மனிதத் தவறுகளால் உயிரிழப்பதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.
இதையும் படியுங்கள் : தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்தாண்டு நடைபெற்ற மொத்த நிகழ்வுகள் இதோ…!
2023ம் ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரை கடந்த 100 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் 20 யானைகள் உயிரிழந்துள்ளன. அவற்றில் 6 யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது என்னும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. அதேபோல கடந்த 2022 ஆண்டு தமிழ்நாட்டில் மட்டும் 106 யானைகள் உயிரிழந்துள்ளன. அவற்றில் 8 யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவை.
கடந்த 3 மாதங்களில் தமிழ்நாட்டில் உயிரிழந்த யானைகளின் விவரம்:
1) 27.02.2023 – சிறுமுகை வனசரம் – பெத்திக் குட்டை வனப்பகுதியில் ஆண்யானை ஒன்று இறந்து கிடந்தது.
2) 04.03.2023 – காரமடை வனச்சரகம், நெல்லித்துறை காப்புக்காடு- மானார் பிரிவில் இறந்த நிலையில் பெண் யானை மீட்கப்பட்டது.
3) 07.03.2023 – தருமபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி பகுதியில் 3 யானைகள் விவசாய நிலத்தின் மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது.
4) 17.03.2023 – தருமபுரி மாவட்டம் கம்பை நல்லூர் அருகே தாழ்ந்திருந்த மின்வடம் பட்டு முதிர்ந்த ஆண் யானை பலியானது.
5) 17.03.2023 – கோவை மாவட்டம் தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் சேம்புக்கரை மலைவாழ் பழங்குடியினர் கிராமத்தில் பெண்யானை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது.
6) 19.03.2023 – கோவை மாவட்டம் காரமடையில் வாயில் காயம் ஏற்பட்ட பெண் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

7) 25.03.2023 – கோவை வனக்கோட்டத்தில் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் பூச்சியூரில் மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்தது.
8) 26.03.2023 – திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய வனத்தில் 20 வயது பெண் யானை இறந்து கிடந்தது
9) 30.03.2023 – ஈரோடு மாவட்டம் கேர்மாளம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கெத்தேசால் வனப்பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை இறந்து கிடந்தது
10) 30.03.2023 – ஈரோடு பர்கூர் வனப்பகுதியில் மின்வேலியில் சிக்கி உயிரிழந்த யானையை வனத்துறைக்கு தெரியாமல் புதைத்த விவசாயி கைது செய்யப்பட்டு, யானையின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.
11) 31.03.2024 – தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கிணற்றில் இருந்து மீட்கப்பட்டு முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டு வரப்பட்ட குட்டி யானை உயிரிழந்தது.
12) 03.04.2023 – ஒகேனக்கல் வனப்பகுதியில் வெவ்வேறு இடங்களில் 2 யானைகள் உயிரிழந்த நிலையில்,போரூர் பகுதியில் ஆண் யானையும், கோடுபட்டி அருகே பெண் யானையும் மர்மமான முறையில் உயிரிழப்பு.

13) 07.04.2023 – நீலகிரி மாவட்டம் தெங்குமரஹடா பகுதியில் இறந்த நிலையில் ஆண் யானையின் சடலத்தை வனத்துறையினர் மீட்டனர்.
14) 08.04.2023 – தமிழ்நாட்டின் எல்லையில் கேரள வனப்பகுதியான அச்சக்கோவில் அருகே குட்டியானை ஒன்று இறந்து கிடந்தது.
15) 10.04.2023 – கோவை மாவட்டம் வால்பாறை பூனாட்சி வனப்பகுதியில் அழுகிய நிலையில் 37 வயது மதிக்கத்தக்க யானை இறந்து கிடந்தது.
16) 10.04.2023 – தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே கரும்பு தோட்டதில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்தது.
17) 11.04.2023 – தென்காசி மாவட்டம் சிவகிரி வனப்பகுதிக்குட்பட்ட கருங்குளம் பகுதியில் உள்ள கரும்புத் தோட்டத்தில் உயர்மின் அழுத்த வேலியில் சிக்கி 8 வயது ஆண் யானை உயிரிழந்தது.
18) 11.04.2023 – கோவை மாவட்டம் கோவனூர் பள்ளத்தாக்கு பகுதியில் மலை அடிவாரத்தில் தோண்டி வைக்கப்பட்ட தண்ணீர் தொட்டி குழிக்குள் குட்டி யானை ஒன்று விழுந்து இறந்து போனது.
கடந்த 20 ஆண்டுகளில் நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் பல்வேறு இடங்களில் யானை வலசை பாதைகள் மனித ஆக்கிரமிப்புகளால் காணாமல் போயுள்ளன. இதன் காரணமாகவே பெரும்பாலான யானைகள் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளன என 15 ஆண்டுகளாக யானைகளின் வாழ்வு முறைகளை ஆய்வு மேற்கொண்டதில் தெரியவந்துள்ளது.
வனப்பகுதியை ஒட்டி உள்ள விளைநிலங்களை சுற்றி உயர் மின்னழுத்த வேலிகளை சிலர் அமைப்பதால் உணவு தேடி வரும் காட்டு யானைகள் அதில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர் மோகன், யானை வழித்தடங்களில் அமைக்கப்பட்டுள்ள சாலைகள் மற்றும் தண்டவாளங்களால் யானைகள் அடிபட்டு உயிரிழக்கும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறினார்.
வனப்பகுதியில் இருந்து பட்டா நிலத்துக்கு 40 மீட்டர் முதல் 60 மீட்டர் தொலைவு இருக்க வேண்டும் என்பது விதிமுறை. பட்டா நிலங்கள் தற்போது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு மிகவும் அருகில் வந்துவிட்டன. அதுதான் பிரச்னைக்கு முக்கிய காரணம் என்று தெரிவிக்கும் யானை ஆர்வலர் ஜெகதீஷ் ரவி, யானைகள், யானைகளின் தொடர் இறப்புகளை தடுக்க அரசு தனிக் குழுவை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி சர்வதேச யானைகள் தினத்தை கடைபிடிக்கும் நேரத்தில் யானைகளைப் பாதுகாக்க உடனடியாக செயலில் இறங்காவிட்டால் இன்னும் சில ஆண்டுகளில் யானைகள் தினம் மட்டுமே மிஞ்சும். வருங்கால தலைமுறையினர் யானை என்ற பிரமாண்ட உயிரினம் இருந்தது என ஆச்சரியப்படும் நிலைக்கு தள்ளப்படுவர் என கவலை கொள்கின்றனர் வன உயிரின ஆர்வலர்கள்.
– செய்தியாளர்கள் பிரபு மற்றும் ஆதமுடன், முதன்மை செய்தியாளர் அன்சர் அலி, நியூஸ் 7 தமிழ்.







