10 நாட்களாக ‘டிமிக்கி’ கொடுக்கும் யானைகள்

நீலகிரி அருகே 10 நாட்களாக வனத்துறையினருக்கு காட்டு யானைகள் பிடிபடாமல் டிமிக்கி கொடுத்து வருகிறது.  நீலகிரி மாவட்டம் ஓவேலி அருகே அமைந்துள்ள ஆரூற்றுப் பாறை, பாரம் எஸ்டேட் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஆனந்தன்…

நீலகிரி அருகே 10 நாட்களாக வனத்துறையினருக்கு காட்டு யானைகள் பிடிபடாமல் டிமிக்கி கொடுத்து வருகிறது. 

நீலகிரி மாவட்டம் ஓவேலி அருகே அமைந்துள்ள ஆரூற்றுப் பாறை, பாரம் எஸ்டேட் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஆனந்தன் மற்றும் மாலு ஆகிய இரண்டு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து ஆரூற்றுப்பாறை பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் கடந்த 9 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இரவு ஆ௹ற்றுப் பாறை கிராம பகுதியில் நுழைந்து குடியிருப்புகளின் அருகே உலா வந்த காட்டு யானையை வனத்துறையினர் ரோந்து வாகனம் மூலம் விரட்டும் பணியில் ஈடுபட்ட போது காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது.

இதனை தொடர்ந்து பத்தாவது நாளாக இன்று 4 கும்கி யானைகள் உதவியுடன், 30க்கும் மேற்பட்ட வேட்டை தடுப்பு காவலர்கள், வனத்துறையினர் என 50க்கும் மேற்பட்டோர் குழுக்களாக பிரிந்து ஆரூற்றுப்பாறை, சந்தன மலை எஸ்டேட், பாரம் எஸ்டேட், திருவள்ளுவர் நகர், சூண்டி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுமக்களை அச்சுறுத்தி வரும் இந்த ஆண் காட்டு யானை தாய் மற்றும் குட்டி யானையுடன் பகல் நேரங்களில் வனப்பகுதியின் அருகே உள்ள தேயிலைத் தோட்டங்களில் உலா வருவதால் பொதுமக்கள் தேயிலை பறிக்கும் தொழிலுக்குச் செல்லாமல் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.

மேலும் பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் எனவும், தேயிலை தோட்டங்கள் மற்றும் குடியிருப்புகளின் அருகே காட்டு யானை நடமாட்டம் தென்பட்டால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும் என வனத்துறையினர் வாகனங்களில் சென்று ஒலிபெருக்கிகள் மூலம் அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.