கோத்தகிரி, மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அமைந்துள்ள கீழ்த்தட்டபள்ளம் பகுதியில் லாரிகளை வழிமறித்த ஒற்றைக் காட்டு யானை, லாரி ஓட்டுநரை விரட்டும் பரபரப்பு காட்சிகள் வெளியாகியுள்ளது.
கோத்தகிரி மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார மலை கிராம பகுதியில்
தற்போது பலாப்பழம் சீசன் துவங்கியுள்ளது. இதனால் பலாப்பழங்களை தேடி சிறுமுகை வனப்பகுதியிலிருந்து காட்டு யானைகள் கோத்தகிரி மேட்டுப்பாளையம் செல்லும்
மலைப்பாதையில் அமைந்துள்ள கீழ்த்தட்டப் பள்ளம், முள்ளூர், மாமரம், குஞ்சப்பணை உள்ளிட்ட பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து மலை கிராமங்களில் முகாமிட்டுள்ளன.
அவ்வாறு முகாமிட்டுள்ள காட்டு யானைகள் குடியிருப்புகள், காப்பி, தேயிலை தோட்டங்கள் மற்றும் கோத்தகிரி மேட்டுப்பாளையம் செல்லும் மலைப்பாதைகளில் இரவு
நேரங்கள் மட்டுமல்லாமல் பகல் நேரங்களிலும் உலா வருகின்றன.
அதே போல் கோத்தகிரி மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் கடந்த ஒரு மாதமாக ஒற்றைக் காட்டு யானை முகாமிட்டு சாலையில் உலா வருவதும் வாகனங்களை துரத்தும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
இன்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி நோக்கி வந்த லாரிகளை கீழ்தட்டப்பள்ளம் பகுதியில் ஒற்றைக் காட்டு யானை வழிமறித்தது. நீண்ட நேரமாக லாரிகளை வழிமறித்தபடி நின்ற காட்டு யானையால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் லாரியைகளை வழிமறித்த காட்டு யானை, லாரியில் உணவு பொருட்கள் ஏதாவது உள்ளதா என லாரியை நோட்டமிட்டு நீண்ட நேரமாக வழிமறித்து நின்றும் லாரியை சுற்றி சுற்றியும் வந்தது, அப்போது காட்டு யானையிடமிருந்து தப்பிக்க லாரியிலிருந்து இறங்கிய ஓட்டுநரை கண்ட காட்டு யானை, லாரி ஓட்டுனரை துரத்தியது. இதை அறிந்து கொண்ட லாரி ஓட்டுநர் வேகமாக ஓடி நொடி பொழுதில் உயிர் தப்பினார்.
இந்நிலையில் கோத்தகிரி மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு, நாள் அதிகரித்து வருவதால் வனத்துறையினர் காட்டு யானைகளின்
நடமாட்டத்தை கண்காணித்து அடர்ந்த வனப் பகுதிக்கு விரட்ட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சே.அறிவுச்செல்வன்







