நாடு முழுவதும் மாநிலங்களவை எம்.பி.க்கள் 24 பேரின் 6 ஆண்டு பதவிக் காலம் 2026 ஜூன், ஜூலையில் முடிவடைகிறது. அந்த இடங்களுக்கு ஜூன் 18-ம் தேதி தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, தமிழகத்தில் சி.வி.சண்முகம் உட்பட 3 பேர் மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
இதனால், 3 இடங்களுக்கு அதே நாளில் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று (ஜூன் 1) வெளியான நிலையில், வேட்புமனு தாக்கலும் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி தேன்மொழியிடம் 2 சுயேச்சை வேட்பாளர்கள் முதல் நாளான நேற்று மனு தாக்கல் செய்தனர்.
வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூன் 8 பிற்பகல் 3 மணி வரை கொடுக்கப்பட்டுள்ளது. மனுக்கள் பரிசீலனை 9-ம் தேதி நடைபெறும். மனுவை திரும்ப பெற 11-ம் தேதி கடைசி நாள் ஆகும். ஜூன் 18 அன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், அதனைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.







