செங்கம் அருகே தங்களை கவனிக்க ஆளில்லை என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று முதியவர்கள் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து உயிரிழப்புக்கு முயற்சி செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சென்னசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட
வெங்கடேசபுரம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி ராமசாமி – சின்னபாப்பா தம்பதியர். இவர்களுக்கு நான்கு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
குடும்பத்துடன் விவசாயம் பார்த்து வந்த இவர்களுக்கு விவசாயம் செய்ய முடியாமல்
போனதால் தாய் தந்தையரை வீட்டில் விட்டுவிட்டு சக குடும்பங்களாய் திருப்பூர்
பகுதிக்கு கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். கணவர் ராமசாமி மற்றும் அவரது மனைவி சின்னப்பாப்பா உடன் ராமசாமியின் அண்ணி ஜக்கம்மா ஆகிய மூவரும் வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் வயதானவர்கள் என்பதால் இவர்களின் அத்தியாவசியத் தேவைகளைக்கூட
பூர்த்தி செய்ய ஆள் இல்லாமல் தவித்து வந்துள்ளனர். 4 மகன் மற்றும் மகள் பேரக் குழந்தைகள் இருந்தும் கவனிக்க ஆளில்லாமல் மன வேதனையில் இருந்து வந்த மூவரும் இனி உயிருடன் இருக்கக் கூடாது என முடிவெடுத்து வயலுக்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை மூவரும் குடித்து உயிரிழக்க முயன்றுள்ளனர்.
தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் உயிருக்குப் போராடியவர்களை மீட்டு செங்கம்
அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பரிசோதித்த மருத்துவர்கள் உயர் சிகிச்சையால் மட்டுமே அவர்களைக் காப்பாற்ற முடியும் என்ற நிலையில் மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்து திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செங்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








