நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை ஒரே வாரத்தில் 35 காசுகள் வரை உயர்ந்துள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் தினமும் 4 கோடியே 50 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நாமக்கல்லில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் தமிழகத்தின் சத்துணவு திட்டத்திற்கும், கேரளா மற்றும் வட மாநிலங்களுக்கும் அனுப்படுகின்றன. இந்த நிலையில் கடந்த 8 -ஆம் தேதி முட்டை கொள்முதல் விலை 4 ரூபாய் 20 பைசாவாக இருந்தது.
கடந்த ஒரு வாரத்தில் படிப்படியாக 35 காசுகள் அதிகரித்து இன்று முட்டை ஒன்று 4 ரூபாய் 55 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தொடர் விலை உயர்வு குறித்து கருத்து தெரிவித்த கோழிப் பண்ணை உரிமையாளர்கள், நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெப்பம் நிலவுவதால் கோழிப் பண்ணைகளில் 20 சதவிகிதம் வரை முட்டை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினர்.
இருப்பினும் தமிழ்நாடு மற்றும் வடமாநிலங்களில் முட்டையின் தேவை அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டனர். இதன் காரணமாக வரும் நாட்களில் முட்டை விலை மேலும் உயரும் என்றும் கோழி தீவனங்களின் விலையும் அதிகரித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினர்.







