பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியாவில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேட்டு பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட ராகுல்காந்தி, தமிழகத்திற்கும் தனக்கும் இடையேயான உறவு, உணர்வுபூர்வமான குடும்ப உறவு என கூறினார். இந்தியாவை மதம், மொழி, கலாச்சாரம் மற்றும் ஜாதி அடிப்படையில் பிரதமர் மோடி பிரிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். தமிழகத்தின் கலாச்சாரம், இந்தியாவின் கலாச்சாரம் என்றும் ராகுல்காந்தி குறிப்பிட்டார்.
பிரச்சாரத்திற்கு பிறகு வேடசந்தூரில், 1978-ம் ஆண்டு நடந்த விவசாயிகள் போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூட்டில் பலியான விவசாயிகளின் நினைவிடத்தில் ராகுல் காந்தி மலர்வளையம் வைத்து மரியாதை செய்தார். அப்போது, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ஜோதிமணி எம்.பி., ஆகியோர் உடன் இருந்தனர். இதையடுத்து, 3 நாள் தமிழக தேர்தல் பரப்புரை பயணத்தை முடித்துக் கொண்டு, மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் ராகுல்காந்தி டெல்லி திரும்பினார்.







