எடப்பாடி பழனிசாமி பொய் மூட்டையை அவிழ்த்து விடுகிறார் என்றும் வதந்திகளை பரப்புவது அவருக்கு அழகல்ல என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சாடியுள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று 33-வது மெகா தடுப்பூசி முகாம் மாநிலம் முழுவதும் நடைபெற்றது. குறிப்பாக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் தலா ஒரு வார்டுக்கு 10 வீதம் 200 வார்டுகளில் 2000 முகாம்கள் நடத்தப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா பரவலை தடுக்க தமிழ்நாடு அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக கூறினார். மாவட்டந்தோறும் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கைக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பயன் பெற்றோரின் எண்ணிக்கை குறித்து தினமும் செய்திகள் வருகிறது. நேற்று கூட செய்தி வெளியிட்டு இருந்தோம். நேற்று வந்த செய்தியை கூட பார்க்காமல் எடப்பாடி பழனிசாமி பொய் மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார் என சாடினார்.
வதந்திகளை பரப்புவது முன்னாள் முதலமைச்சருக்கு அழகு அல்ல என தெரிவித்த அவர், இல்லாததையும் பொல்லாததையும் அறிக்கை வெளியிடுகிறார் என்றார். தானும் அரசியலில் இருக்கிறேன் என்பதற்காக அறிக்கை வெளியிட்டுகிறார் என மா.சுப்பிரமணியன் குற்றம்சாட்டினார். அம்மா கிளினிக் செயல்படாததால் மருத்துவம் இன்றி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என கூறும் எடப்பாடி பழனிசாமி, பாதிக்கப்பட்டவர்களை அழைத்து அதனை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 45 லட்சம் பேர் தான் பயன் பெற்றுள்ளனர் என அவர் கூறுகிறார். ஆனால் இந்த நிமிடம் வரை 83,45,942 பேர் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்தார்.
– இரா.நம்பிராஜன்








