பொதுக்குழுவில் இபிஎஸ் ஒற்றைத் தலைமை ஏற்பார்: ஜெயக்குமார்

ஜூலை 11 ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் திட்டமிட்டபடி இபிஎஸ் ஒற்றைத் தலைமை ஏற்பார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை காமராஜர் சாலையில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா,…

ஜூலை 11 ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் திட்டமிட்டபடி இபிஎஸ் ஒற்றைத் தலைமை ஏற்பார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை காமராஜர் சாலையில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் அதிமுக அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்களுடன் வந்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “ பொதுக்குழுவால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அதிமுகவில் அடிமட்ட தொண்டன் உயரிய பதவியை அடையலாம் என்பதற்கு சிறந்த சான்றாகும்” என்று தெரிவித்தார்.

யாரையும் அவமதிக்கும் எண்ணம் அதிமுகவிற்கு இல்லை என சுட்டிக்காட்டிய ஜெயக்குமார், “பொதுக்குழு தான் உச்சபட்ச அதிகாரம் கொண்டது. ஜூலை 11ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் கட்டாயம் ஒற்றை தலைமை தீர்மானம் நிறைவேற்றப்படும். அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்படுவார்” எனக் குறிப்பிட்டார்.

ஒட்டுமொத்த தொண்டர்களும் ஒற்றை தலைமையை விரும்புவதாக தெரிவித்த அவர், நடந்து முடிந்த பொதுக்குழுவில் ஓபிஎஸ் மீது பாட்டில்கள் வீசப்பட்டது குறித்து பேசும்போது ஒட்டுமொத்த தொண்டர்களும் ஓபிஎஸ் செயல்பாட்டில் அதிருப்தியாக இருப்பதாக சுட்டிக் காட்டினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், “அவைத் தலைவராக பொறுப்பேற்ற நிலையில் செம்மையாக, ஒற்றுமையாக செயல்பட்டு கட்சியை வழிநடத்துவேன் என குறிப்பிட்ட அவர் இபிஎஸ் ஒற்றை தலைமையை ஏற்க வேண்டும்” என வேண்டுகோள் முன்வைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.